வரலட்சுமி விரதம் சுமங்கலிகள் மட்டுமே இருக்க வேண்டுமா?

 

வரலட்சுமி விரதம் சுமங்கலிகள் மட்டுமே இருக்க வேண்டுமா?

வரலட்சுமி விரதம் இன்று கொண்டாடப்படுகிறது. வீடுகளில் பெண்கள் விரதம் இருந்து, லட்சுமி தேவியின் சந்தன சிலையை உருவாக்கி பூஜை செய்து, வணங்குவது வழக்கம். பெரும்பாலும் வரலட்சுமி நோன்பு என்றாலே கணவன் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று மனைவி செய்வது என்ற நம்பிக்கை உள்ளது. திருமணம் ஆன பெண்கள் மட்டுமல்ல, நல்ல குணமுள்ள கணவன் கிடைக்க வேண்டும் என்று கன்னிப் பெண்களும் கூட இன்றைய நாளில் விரதம் இருக்கலாம்.

வரலட்சுமி விரதம் சுமங்கலிகள் மட்டுமே இருக்க வேண்டுமா?

இன்றைய நாளில் வழிபாடு நடத்துவது ஆதி லட்சுமி, தன லட்சுமி, தைரிய லட்சுமி, சௌபாக்கிய லட்சுமி, விஜய லட்சுமி, தன்யா லட்சுமி, சந்தான லட்சுமி, வித்யா லட்சுமி என அஷ்ட லட்சுமிகளையும் வணங்கியதற்கு இணையானது. இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் இன்று (ஆகஸ்ட் 20)ம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் என பல மாநிலங்களிலும் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

இன்றைய தினம் பெண்கள் அதிகாலையில் எழுந்து வீட்டை சுத்தம் செய்து குளிக்க வேண்டும். எதையும் சாப்பிடாமல் வீட்டின் பூஜை அறையை புனிதமான நீரைக் கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும். லட்சுமி தேவி சிலை அல்லது படத்தை புத்தம் புதிய துணி, நகை, குங்குமம், மலர்களைக் கொண்டு அலங்கரிக்க வேண்டும். பழங்கள், இனிப்பு, உணவு போன்றவற்றை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும். கற்பூரம், அகர்பத்தி காண்பித்து பூஜை செய்ய வேண்டும். இன்றைய நாள் முழுக்க உணவு எதையும் சாப்பிடக் கூடாது. பூஜை முடிந்த பிறகு, பூஜையில் பங்கேற்றவர்கள், உறவினர்கள், குடும்பத்தினருக்கு பிரசாதம் வழங்கிய பிறகு இரவில் சிறிதளவு பழம் சாப்பிடலாம்.

விஷ்ணு புராணம் மற்றும் நாரத புராணத்தில் வரலட்சுமி விரதத்தன்று நோன்பு இருப்பவர்கள் வளம், நலம், நல்ல குழந்தைப் பேறு, ஆரோக்கியத்தைப் பெறுவார்கள் என்று தெரிவிக்கிறது. குடும்பத்தில் உள்ள துரதிஷ்டம், வறுமையை நீக்கி செல்வச் செழிப்பையும் மகிழ்ச்சியையும் வரலட்சுமி விரதம் அளிக்கும்.

எனவே தீபாவளிக்கு இணையான கொண்டாட்டத்துடன் வணங்க வேண்டிய பண்டிகை வரலட்சுமி நோன்பு. இன்றைய நாளில் பூஜை செய்து மகாலட்சுமி மற்றும் விநாயகரின் அருளைப் பெறுங்கள்!