• November
    13
    Wednesday

Main Area

Main



பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாரபட்சமற்ற விசாரணை: சி.பி.சி.ஐ.டி., ஐ.ஜி. திட்டவட்டம்!

ஸ்ரீதர்
ஸ்ரீதர்

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாரபட்சமற்ற நேரமையான விசாரணை நடத்தப்படும் என சி.பி.சி.ஐ.டி., ஐ.ஜி. ஸ்ரீதர் திட்டவட்டம் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளிடம் முகநூல் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து அந்த மாணவிகளை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வந்துள்ளது.

தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக, சபரிராஜன் (25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களுக்கு தொடர்பிருப்பதாகவும், குற்றவாளிகளை காப்பாற்ற ஆளுங்கட்சி தீவிரம் காட்டுவதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு முதலில் மாற்றிய தமிழக அரசு, பின்னர் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தது. விரைவில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் என தெரிகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக செய்தியாளர்களை கோவை காவலர் விருந்தினர் மாளிகையில் சந்தித்த சி.பி.சி.ஐ.டி., ஐ.ஜி. ஸ்ரீதர், பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வழக்கு சிபிசிஐடி எஸ்.பி., நிஷா பார்த்திபன் தலைமையில் விசாரிக்கப்படும். உதவியாக கோவை டி.எஸ்.பி. முத்துசாமி, கோவை ஆய்வாளர் சுமதி உட்பட 5 ஆய்வாளர்கள் ஆகிய தனிப்படையினர் இன்று விசாரணையை துவக்கியுள்ளனர்.

கோவை காவல்துறை கொடுத்த அனைத்து ஆவணங்களை தனியாக குழு அமைத்து விசாரித்து  வருகிறோம். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும். விசாரணை முடிந்து சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவை காவல்துறை கைது செய்தவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்தப்படும். வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நேர்மையான முறையில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும்.

சிபிஐ-யிடம் வழக்கு சென்றால் ஆவணங்கள் ஒப்படைக்கப்படும். எந்தவித குழப்பமும் இல்லை. செல்போன் தடவியல் ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. விசாரணை நேர்மையாக நடக்க வேண்டும் என்பதால் தான் ஐ.ஜி. மட்டத்தில் உள்ள நான் வந்துள்ளேன் என்றார்.

2018 TopTamilNews. All rights reserved.