புதுச்சேரியின் புதிய ஆளுநராக இல. கணேசன் நியமிக்கப்பட்டதாக தகவல்!

 

புதுச்சேரியின் புதிய ஆளுநராக இல. கணேசன் நியமிக்கப்பட்டதாக தகவல்!

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பி.ஜே.பி மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான இல.கணேசன் நியமிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

தமிழகத்தின் பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், திடீரென தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதேபோல் தமிழக பாஜகவின் மூத்த தலைவர் இல. கணேசன் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. அண்மையில் புதுவை பட்ஜெட் கூட்டத் தொடர் கூட கிரண்பேடி உரை இல்லாமல்தான் தொடங்கியது. இந்நிலையில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநர் மாற்றப்பட்டிருக்கிறார். தற்போதைய துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மத்திய அமைச்சராகிறார் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள இல. கணேசன், “ஒரு பத்திரிகையில் ஒரு செய்தி வந்தது. அதை உறுதிப் படுத்தும் எதுவும் அதிகார பூர்வமாக வரவில்லை. வாழ்த்துக்கள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றன. நன்றி. உறுதியான செய்தி வந்தால் உடனடியாகப் பதிவு செய்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.