’’கோரிக்கை வைக்க உரிமையிருந்த எனக்கு நன்றி சொல்லும் கடமையுமிருக்கிறது’’-வைரமுத்து

 

’’கோரிக்கை வைக்க உரிமையிருந்த எனக்கு நன்றி சொல்லும் கடமையுமிருக்கிறது’’-வைரமுத்து

புதிய கல்விக்கொள்கையினால் இரு மொழிக் கொள்கை மாநிலமாக இருந்த தமிழ்நாடு இனி மும்மொழிக் கொள்கையை ஏற்றுச் செயல்படுத்தப் பட கட்டாயம் ஆக்கப்படும். மும்மொழித் திட்டம் என்ற பெயரில் சமஸ்கிருதம், ஹிந்தித் திணிப்புக்கு இடமேற்படுத்தும் இத்திட்டத்திற்கு ஆரம்ப நிலையிலேயே அதிமுக அரசு தன் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், அறிஞர் அண்ணா ஆட்சியில், சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இருமொழித் திட்டத்தினை – கலைஞரும், எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் முதல்வர்களாக இருந்து தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்த நிலைப்பாட்டினை இவ்வாட்சி கைவிடக்கூடாது என்று வலியுறுத்தியிருந்தார் திராவிட கழக தலைவர் கி.வீரமணி.

’’கோரிக்கை வைக்க உரிமையிருந்த எனக்கு நன்றி சொல்லும் கடமையுமிருக்கிறது’’-வைரமுத்து

இதையடுத்து கவிஞர் வைரமுத்துவும் தனது டுவிட்டர் பதிவின் மூலமாக, ‘’அண்ணா – கலைஞர் இறுதி செய்ததும், எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா உறுதி செய்ததும் இருமொழிக் கொள்கைதான். முதலமைச்சர் பழனிச்சாமி அரசும் அதைத் தாங்கிப் பிடிக்கத் தயங்கத் தேவையில்லை. தேசியக் கொடியை மதிப்போம்; திராவிடக் கொடியும் பிடிப்போம்’’அதிமுக அரசை கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், ’’தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை. இருமொழி கொள்கையே தொடரும். புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை இடம்பெற்றிருப்பது வேதனை, வருத்தம் அளிக்கிறது. தமிழக மக்களின் உணர்வுகளை ஏற்று மும்மொழி கொள்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதனை களைய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும். அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கு ஏற்ப செயல்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்’’ என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

முதல்வரின் இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து கவிஞர் வைரமுத்து, தனது டுவிட்டர் பக்கத்தில், ‘’இருமொழிக் கொள்கையில் உறுதிகாட்டியிருக்கும் தமிழ்நாட்டு முதலமைச்சர் பழனிச்சாமியைப் பாராட்டுகிறேன்; தமிழ் உணர்வாளர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன். கோரிக்கை வைக்க உரிமையிருந்த எனக்கு நன்றி சொல்லும் கடமையுமிருக்கிறது’’என்று தெரிவித்துள்ளார்.