மெட்ரோ ரயிலில் பறந்த இதயம்!

 

மெட்ரோ ரயிலில் பறந்த இதயம்!

தெலங்கானாவில் முதல்முறையாக மெட்ரோ ரயில் மூலம் இதயம் கொண்டுச் செல்லப்பட்டு நோயாளிக்கு பொருத்தப்பட்டது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மூளைச்சாவு அடைந்த நபரின் இதயத்தை நாகோல் மெட்ரோ நிலையத்திலிருந்து ஜூபிலி ஹில்ஸ் செக் போஸ்ட் மெட்ரோ நிலையம் வரை ரயில் மூலம் 25 கி.மீ தொலைவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு 30 நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் மருத்துவர்கள் கொண்டுச் சென்றனர். சாதாரணமாக இந்தவழியாக பேருந்திலோ காரிலோ பயணித்திருந்தால் 45 நிமிடங்கள் ஆகும். ஆனால் மெட்ரோ ரயிலால் 30 நிமிடங்களிலேயே மருத்துமனைக்கு இதயம் கொண்டு செல்லப்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் அந்த இதயம் நோயாளிக்கு பொருத்தப்பட்டது.

விபத்தில் உயிரிழந்த விவசாயி நர்சயா, டிராக்டரில் வந்துகொண்டிருந்தபோது கீழே விழுந்து உயிரிழந்தார். அவரின் இதயம் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளையும் ஹைதராபாத்தில் உள்ள ஜூபிலி ஹில்ஸில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பொருத்த விவசாயியின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். உறுப்பு தானம் செய்ய உதவும் ஜீவந்தன் என்ற அமைப்பால் இந்த நன்கொடை வழங்கப்பட்டது.