நகையுடன் வந்த இளைய மருமகள்… மூத்த மருமகளை டார்ச்சர் செய்த மாமியார், கணவர்… மகள் உயிரை மாய்த்ததால் பெற்றோர் கொந்தளிப்பு

 

நகையுடன் வந்த இளைய மருமகள்… மூத்த மருமகளை டார்ச்சர் செய்த மாமியார், கணவர்… மகள் உயிரை மாய்த்ததால் பெற்றோர் கொந்தளிப்பு

வரதட்சணை கேட்டு மருமகளை மாமியார், கணவன் சித்ரவதை செய்ததால் வேதனை அடைந்த மூத்த மருமகள் விஷம் குடித்து உயிரிழந்துள்ளார். மகளின் சாவில் மர்மம் இருப்பதாக கூறிய பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள கொளப்பாடி கிராமத்தைச் சேர்ந்த இன்ஜினீயர் பாலசுப்பிரமணியனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த செவிலியர் விஜயலட்சுமிக்கும் ஓராண்டக்கு முன்பு திருமணம் நடந்தது. துபாயில் பாலசுப்பிரமணியனும், அவரது சகோதரர் ராதாகிருஷ்ணனும் பணியாற்றி வந்தனர். இந்தநிலையில் ராதாகிருஷ்ணனின் திருமணத்திற்காக அண்ணன், தம்பி இருவரும் கடந்த மார்ச் மாதம் சொந்த ஊருக்கு வந்தனர். ராதாகிருஷ்ணனுக்கும் திருமணமும் நடந்து முடிந்தது. கொரோனா ஊரடங்கினால் மீண்டும் துபாய்க்குச் செல்லாமல் அவர்கள் வீட்டிலேயே இருந்தனர்.

இந்த நிலையில், விஷம் குடித்த நிலையில் விஜயலட்சுமி அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடல் பிரேதப் பரிசோதனைக்காகப் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த குன்னம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே, எனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி குன்னம் காவல்துறையில் விஜயலட்சுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அந்த புகார் மனுவில், ”எங்களது குடும்பம் ஏழ்மையான குடும்பம். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பாலகிருஷ்ணனின் அம்மா, அப்பா இருவரும் எங்க மகனுக்கு பெண் கிடைக்கவில்லை. உங்களது மகளை கொடுத்தால் போதும் என்று சொல்லி எங்கள் வீட்டு பெண்ணை கல்யாணம் பண்ணிட்டு போனாங்க. திருமணத்தின்போது எங்கள் தகுதிக்கு ஏற்ற மாதிரி செய்தோம். இந்த நிலையில் பாலகிருஷ்ணனின் தம்பி ராதாகிருஷ்ணனுக்கு அதிக நகை போட்ட பெண்ணை திருமணம் செய்து வைத்திருங்காங்க. இதனால், எனது மகள் விஜயலட்சுமியிடம் மாமனார், மாமியார், கணவர் ஆகியோர் வரதட்சணை கேட்டு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளனர். எங்கள் மகள் விஜயலட்சுமி விஷம் குடித்துவிட்டதாக அவரது கணவர் சொல்கிறார். மகளின் சாவில் சந்தேகம் இருக்கிறது. உடனே விசாரித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

இந்த நிலையில் விஜயலட்சுமியின் உடலை வாங்க மறுத்து பெற்றோர், உறவினர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதி அளித்தனர். இதையடுத்து, விஜயலட்சுமியின் உடலை பெற்றோர் வாங்கி சென்ற அடக்கம் செய்தனர். திருமணம் ஆகி ஒரு வருடமே ஆனதால் பெரம்பலூர் வருவாய்க் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.