பெட் வெட்டிங் தடுக்க, தவிர்க்க வழிகள் என்ன?

 

பெட் வெட்டிங் தடுக்க, தவிர்க்க வழிகள் என்ன?

குழந்தைகளுக்கு ஒரு வயது முடிந்த உடனேயே பாட்டிங் எனப்படும் மலம் கழித்தல் பழக்கத்தை பெரும்பாலான பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்துவிடுகின்றனர். ஆனால், இரவில் படுக்கையில் சிறுநீர் கழிக்காமல் கழிப்பறையைப் பயன்படுத்தும் பழக்கத்தைக் கற்றுக்கொடுப்பது எப்படி என்று தெரியாமல் பலரும் திணறுகின்றனர். இதன் விளைவு டயப்பர் விற்பனை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பல வீடுகளில் காலையில் படுக்கையில் சிறுநீர் கழித்த சிறுவர் சிறுமியருக்கு திட்டு விழுவதும் தொடர்கதையாக உள்ளது.

பெட் வெட்டிங் தடுக்க, தவிர்க்க வழிகள் என்ன?

நம்முடைய உடலில் இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. அதிகப்படியான தண்ணீர் மற்றும் ரத்தத்தில் உள்ள கழிவுகளை சிறுநீரகம் பிரித்து சிறுநீர்ப்பைக்கு அனுப்புகிறது. சிறுநீர்ப்பை நிறைந்ததும் அது பற்றிய தகவல் மூளைக்குச் செல்கிறது. இதைத் தொடர்ந்தே சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது. சிறுநீர் பை நிறைந்ததும் சிறுநீர் வெளியேறுவது பொதுவாக இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தன்னிச்சையாக நிகழும். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் உணர்வுக்கு அது தெரிய ஆரம்பிக்கும்போது கழிப்பறை பயிற்சிகளை பெற்றோர் வழங்குகின்றனர்.

சிறுநீர் வந்தால் அடக்கி வைத்து கழிப்பறைக்கு சென்று கழிக்கும் பழக்கத்தை குழந்தைகள் மூன்று முதல் ஐந்து வயதுக்குள் பழகிவிடுகின்றனர். ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளில் 10 சதவிகிதம் பேர்தான் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவர்களாக உள்ளனர். ஏழு வயதுக்கு மேலும் தொடர்ந்தால் அதையே பெட் வெட்டிங் பிரச்னையாக பார்க்கின்றனர்.

பெட் வெட்டிங் தவிர்க்க…

மாலை முதல் இரவு தூங்கச் செல்லும் வரை குழந்தைகளை அவ்வப்போது சிறுநீர் கழிக்கச் சொல்ல வேண்டும்.

தண்ணீர் அருந்தும் அளவைக் சற்று குறைத்துக்கொள்ளலாம்.

படுக்கைக்கு செல்வதற்கு முன்பு சிறுநீர் கழிக்க வைக்க வேண்டும். அதே போல் காலையில் எழுப்பி விட்டதும் கழிப்பறைக்கு உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டும்.

இரவில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த முதலில் சில நாட்களுக்கு நள்ளிரவில் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பெற்றோர் கண் விழித்து குழந்தையை கழிப்பறைக்கு அழைத்துச் சென்று சிறுநீர் கழிக்கச் செய்ய வேண்டும்.

அதன் பிறகு குறிப்பிட்ட நேரத்தில் எழுப்பி அவர்களை மட்டும் கழிப்பறைக்கு சென்று வரச் சொல்லலாம்.

படுக்கையில் சிறுநீர் கழித்தல் பிரச்னை உள்ள குழந்தைகளை அடிக்க வேண்டாம். அது வேறு பிரச்னைகளை ஏற்படுத்திவிடலாம்.

குழந்தை படுக்கையில் சிறுநீர் கழிக்கவில்லை என்றால் அவனை பாராட்டுங்கள்.

என்ன செய்தும் குழந்தை படுக்கையில் சிறுநீர் கழிக்கிறது என்றால் மருத்துவரின் ஆலோசனையை நாடலாம். குழந்தைக்கு மலச்சிக்கல் இருந்தால், சிறுநீர் கழித்தலில் வலி உள்ளிட்ட பிரச்னை இருந்தால், குழந்தை எப்போதும் பயம் பதற்றமான மனநிலையில் இருந்தால் படுக்கையில் சிறுநீர் கழித்தல் பிரச்னை தொடரலாம். இவற்றை சரி செய்த பிறகே, கழிப்பறை பயிற்சி உள்ளிட்டவற்றை அவர்களுக்கு வழங்குவது சரியாக இருக்கும்.