நவராத்திரி கொலு படிகள் எப்படி அமைய வேண்டும் ?

 

நவராத்திரி கொலு படிகள் எப்படி அமைய வேண்டும் ?

நவராத்திரி விழாவானது நல்ல எண்ணங்கள், திறமைகள், கல்வி, செல்வங்களை நம் குடும்பத்துக்கு கொண்டு வந்து சேர்க்கும் பண்டிகையாகும்.

நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படுவது கொலு வைப்பதாகும். கொலுவில் மண்ணாலான பொம்மைகளை வைத்து வழிபடுவது, பூமாதேவிக்கு செய்யும் மரியாதையாகும்.

நவராத்திரி கொலு படிகள் எப்படி அமைய வேண்டும் ?

கொலு வைப்பது வாஸ்துப்படி மிகவும் நல்லது. அந்த வீட்டிலிருக்கும் அனைத்துவித தோஷங்களும் நீங்கி, நன்மை பயக்கும்விதமாக அமையும். மேலும், வருடா வருடம் கொலு வைப்பவர்ளுக்கு எப்படி கொலு வைக்க வேண்டும். எந்த வரிசையில் கொலு பொம்மைகள் வைக்க வேண்டும் என்பது தெரியும். புதிதாக தங்களின் வீட்டில் கொலு பொம்மை வைக்க விரும்புபவர்களுக்கு அதை எப்படி முறையாக வைக்க வேண்டும் என்பது தெரிந்து அதன் படி வைப்பது நல்லது. அவரவர் வசதிக்கேற்ப 3 படிகள், 5 படிகள், 7 படிகள், 9 படிகள் என 11 படிகள் வரை ஒற்றைப்படையில் வைக்க வேண்டும்.

நவராத்திரி கொலு படிகள் எப்படி அமைய வேண்டும் ?

கொலு படியின் ஒவ்வொரு படியும் ஒவ்வொரு தத்துவத்தை விளக்கும் விதமாக உள்ளது. உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் எப்படி படிப்படியாக தோன்றியது என்றும், மனிதன் வாழ்க்கையில் படிப்படியாக எப்படி முன்னேற வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தும் விதமாக இந்த கொலு படிகள் அமைகின்றன.

நவராத்திரி கொலுவில் தெய்வீகத்தை உணர்த்தும் சுவாமி பொம்மைகள், இயற்கையை காட்சிப்படுத்தும் பொம்மைகள், விலங்கின பொம்மைகள் உள்ளிட்டவை வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். வீடுகளிலும், கோவில்களிலும் நவராத்திரி விழா நடைபெறும்.

முதல் படி:
கொலு மேடையின் கீழிலிருந்து மேலாக முதல் படியில் ஓரறிவு கொண்ட உயிரினங்களும், இயற்கையின் தத்துவத்தை விளக்கும்படியாகவும் புல், செடி ,கொடி, போன்ற தாவரங்களின் பொம்மைகளை வரிசைப்படி வைக்க வேண்டும்.

இரண்டாம் படி:

இரண்டாவது படியில், ஈரறிவு கொண்ட கடல்வாழ் உயிரினங்களான நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் இடம்பெறலாம்.

மூன்றாவது படி:

மூன்றாவது படியில், மூன்றறிவு படைத்த உயிரினங்களான கரையான், எறும்பு, உள்ளிட்ட பூச்சி இன பொம்மைகள் இடம்பெற்றிருக்கும்.

நான்காவது படி:

நான்காவது படியில் நான்கறிவு உயிரினங்களான நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகள் இடம்பெற வேண்டும்.

நவராத்திரி கொலு படிகள் எப்படி அமைய வேண்டும் ?

ஐந்தாவது படி:

ஐந்தாவது படியில், ஐந்து அறிவு கொண்ட மிருகங்கள் மற்றும் பறவைகளின் பொம்மைகள் இடம்பெற்றிருக்கும்.

ஆறாவது படி:

ஆறாவது படி ஆறறிவு கொண்ட மானிட பிறவிக்கு உரியது. எந்த உயிரினங்களுக்கும் இல்லாத சிந்திக்கும், சிரிக்கும் சக்தியை இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ளார்.
அத்தகைய ஆறாவது அறிவு கொண்ட மனிதர்களின் பொம்மைகளை வைத்து ஆறாவது படியை அலங்கரிக்க வேண்டும்.

ஏழாவது படி:

மனித பிறவியில் பிறந்து உயர்நிலையை அடைந்த மகான்கள், சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள், குருமார்கள் போன்றோரின் பொம்மைகள் வைக்க வேண்டும்.

எட்டாவது படி:

தேவர்கள், அட்டதிக்கு பாலகர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள், தேவதைகள் போன்றோரின் பொம்மைகளை கொண்டு எட்டாவது படியை அலங்காரம் செய்ய வேண்டும்.

ஒன்பதாவது படி:

நவராத்திரி கொலு படிகள் எப்படி அமைய வேண்டும் ?

இவ்வுலகை உருவாக்கிய ஆதிபராசக்தியை நடுவில் வைத்து, அவளால் உருவாக்கப்பட்ட படைத்தல், காத்தல்,அழித்தல் தொழிலுக்கு அதிபதிகளான முப்பெரும் தேவர்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரும், முப்பெரும் தேவிகளான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி தேவி போன்றோரின் தெய்வங்களின் உருவ பொம்மைகளை வைத்து ஒன்பதாவது படியை அமைக்க வேண்டும்.

நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களிலும், தினமும் ஒவ்வொருவிதமான தானியங்களை வேகவைத்து அதை நைவேத்தியமாக வைத்து வழிபடலாம். அம்பிகைக்கு படையலாக வைத்த நைவேத்திய பொருளை வீட்டுக்கு வரும் நன்பர்கள், உற்றார், உறவினர்களுக்கு கொடுக்கலாம். அதோடு அவர்களுக்கு லட்சுமி வாசம் செய்யும் தாம்பூலம் கொடுக்க வேண்டும். முடிந்தால் உங்கள் வீட்டில் இங்கு கூறப்பட்டுள்ளது போல படிகள் அமைத்து கொலு வைத்து அம்பிகையை வணங்குங்கள்.

கொலு வைக்க முடியாதவர்கள், வழக்கம்போல, நாம் வழிபடக்கூடிய தெய்வங்களுக்கு பூ அலங்காரங்கள் செய்து வழிபடலாம். வீட்டில் கொலு வைத்தது போல அம்பிகையிடம் வேண்டிக்கொண்டு மனதார வழிபாடு செய்தால், நவராத்திரிக்கு பின் வரும் 10வது நாளான விஜய்தசமி போல, நம் வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.

-வித்யா ராஜா