ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் அருந்தலாம்?

 

ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் அருந்தலாம்?

நம்முடைய உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பிலும் குறிப்பிட்ட சதவிகிதம் தண்ணீர்தான் உள்ளது. நம் உடல் ஆரோக்கியமாக இயங்க தண்ணீர் கட்டாயம் தேவை. தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்போது உடல் உறுப்புக்களின் செயல்திறன் பாதிக்கப்படுகிறது. சிறுநீர், வியர்வை வழியாக தினமும் உடலில் இருந்து தண்ணீர் வெளியேறிக்கொண்டுதான் இருக்கிறது. இது மட்டுமின்றி சுவாசித்தல் உள்ளிட்ட உடலின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் தண்ணீர் இழப்பு நடந்துகொண்டுதான் இருக்கிறது. எனவேதான் தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் அருந்தலாம்?

போதுமான அளவு என்றால் என்ன என்று கேள்வி எழலாம். மனிதர்கள் தினமும் இவ்வளவு தண்ணீர் குடித்தால் போதும் என்று ஒரு நம்பரை சொல்லிவிட முடியாது. வயது, உடல்நிலை போன்ற பல்வேறு காரணிகளை பொறுத்தே ஒருவருக்கு தினமும் எவ்வளவு தண்ணீர் தேவை என்பதை உறுதி செய்ய முடியும்.

இருப்பினும் தோராயமாக ஒரு ஆரோக்கியமான மனிதனுக்கு 2 லிட்டர் தண்ணீர் தேவைப்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு அதிக தண்ணீர் ஆபத்தில் முடிந்துவிடும். அவர்கள் மருத்துவர் பரிந்துரைத்த அளவு தண்ணீர்தான் அருந்த வேண்டும்.

ஆரோக்கியமான நபர்கள் தினமும் 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். 2 லிட்டர் குடித்தோமா என்று எப்படிக் கணக்கிடுவது… ஒரு பெரிய டம்ளரில் ஒரு நாளைக்கு எட்டு முறை தண்ணீர் குடிப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

அமெரிக்காவின் நேஷனல் அகாடமிக்ஸ் ஆஃப் சயின்ஸ் ஒரு நாளைக்கு ஆணுக்கு 3.7 லிட்டரும் பெண்ணுக்கு 2.7 லிட்டர் தண்ணீரும் அவசியம் என்று கூறுகிறது. வெயில் காலங்களில் தாகம் அதிகமாக இருக்கும். இதனால் தண்ணீர் அதிகம் அருந்திவிடுவோம். மழை, குளிர் காலங்களில் தாகம் இருக்காது. இதனால் தண்ணீர் அருந்துவது குறைந்துவிடும். அப்போதும் கூட உடல் ஆரோக்கியமாக இயங்க 8 கிளாஸ் தண்ணீர் அருந்துவதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

தண்ணீர் எவ்வளவு தேவை என்பது நாம் வாழும் இடத்தைப் பொருத்தும் மாறுபடும். அதிக வெப்பம், அதிக காற்றில் ஈரப்பதம் உள்ள பகுதிகள், வறண்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தண்ணீர் சற்று அதிகமாகவே தேவைப்படும்.

நாம் எடுத்துக்கொள்ளும் சில உணவுகள் உதாரணமாக தேநீர், காபி, ஆல்கஹால் போன்றவை சிறுநீர் கழித்தலை அதிகரிக்கச் செய்யும். அதே போல் அதிக காரம், அதிக உப்பு, இனிப்பு உள்ள உணவை உட்கொள்பவர்களுக்கும் தாகம் அதிகமாகவே இருக்கும். இதனால் இவர்கள் சற்று அதிகம் தண்ணீர் எடுக்க வேண்டியிருக்கும்.

வெப்ப பிரதேசத்திலோ, குளிர் பிரதேசத்திலோ வீட்டுக்குள்ளேயே இருக்கும்போது தண்ணீரின் தேவை குறைவாகவே இருக்கும். அதுவே வெளியே செல்கிறோம் என்றால் உடலில் வியர்வை அதிகரிக்கும். இதனால் தண்ணீரின் தேவை அதிகரிக்கும்.

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் தண்ணீரை சற்று அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். மருத்துவரின் ஆலோசனையை இவர்கள் பின்பற்றுவது கட்டாயம்.

காய்ச்சல், சிறுநீரக கற்கள் போன்ற பிரச்னை உள்ளவர்கள் தண்ணீரை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். இது நோய்க் கிருமிகளை வெளியேற்ற உதவும். அதே நேரத்தில் ஏற்கனவே கூறியது போல சிறுநீரக செயலிழப்பு போன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கு தண்ணீர் மிகக் குறைந்த அளவே பயன்படுத்த வேண்டிய சூழல் இருக்கும்.