கொரோனா தடுப்பூசி தயக்கம் வேண்டாம்!

 

கொரோனா தடுப்பூசி தயக்கம் வேண்டாம்!

2020 மிகக் கொடுமையான ஆண்டாகவே அனைவருக்கும் அமைந்திருந்தது. லாக் டவுனைத் தொடர்ந்து வேலை இழப்பு, ஊதிய உயர்வு நிறுத்தம், ஊதியம் குறைப்பு, விலைவாசி உயர்வு, வங்கி இ.எம்.ஐ-க்கு வட்டி மீது வட்டி என்று பல்வேறு கஷ்டங்கள். ஊரடங்கு காரணமாக வருவாய் பாதிக்கப்பட்டு சரியான நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் உயிரை விட்டவர்கள் பற்றிய கணக்கே இல்லை.

இந்த நிலையில் 2021 புதிய நம்பிக்கையோடு பிறந்தது. கொரோனா தடுப்பூசி அறிமுகம் ஆகவே, நிலைமை படிப்படியாக சீராகிவிடும் என்ற நம்பிக்கை அனைவர் மனதிலும் தோன்றியது. அதற்கு ஏற்றார்போல் கொரோனா பரவல் பூஜ்ஜியம் என்ற நிலையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

கொரோனா தடுப்பூசி தயக்கம் வேண்டாம்!

கொரோனா தடுப்பூசி முதலில் முன்களப் பணியாளர்களுக்கு போடப்பட்டது. ஒரு சில அசம்பாவிதங்கள் தவிர்த்து பெரிதாக ஒன்றும் இல்லை. எல்லாம் இயல்பாக சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் மார்ச் மாதம் மீண்டும் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. இந்த நிலையில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது.

அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டால் அதன் பிறகு கொரோனா பயமின்றி வாழலாம் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது. கொரோனா தொடர்பாக மக்கள் மத்தியில் எழும் பல கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை என்பதே நிதர்சனம்.

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி எப்போது போட்டு முடிக்கப்படும், இப்போது போடப்படும் இரண்டு டோஸ் தடுப்பூசி மட்டும் கொரோனாவைத் தடுக்க போதுமா, காலகாலத்துக்கும் இந்த ஒரு தடுப்பூசியே போதுமானதா அல்லது ஒவ்வொரு ஆண்டும் பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டுமா, வீரியம் அடைந்த கொரோனா வைரஸ் கிருமியைத் தடுப்பூசி தடுக்குமா, சிலருக்கு அறிகுறிகள் எதையும் வெளிப்படுத்தாமல் கொரோனா வந்து செல்வதைத் தடுப்பூசி தடுக்குமா என்று கேள்விகள் பல உள்ளன.

தடுப்பூசி போட்டு முடிக்க ஆண்டுகள் ஆகலாம் என்பதுதான் எதார்த்தமான நிலை. தற்போது தடுப்பூசியில் பற்றாக்குறை உள்ளதாகச் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. மேலும் தடுப்பூசி பற்றித் தொடர்ந்து ஆய்வுகளும் நடந்து வருகின்றன. அவை முழுமை அடையும் போதுதான் நம்முடைய கேள்விகளுக்கான பதில் கிடைக்கும்.

வைரஸ் மியூட்டேஷன் என்பது தடுப்பூசியின் செயல்திறனில் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதுதான் ஆராய்ச்சியாளர்களின் பதிலாக உள்ளது. எனவே, இன்றைய காலகட்டத்தில் தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் காட்ட வேண்டாம் என்கின்றனர்.

தடுப்பூசி போடுவதால் சிலருக்கு தலைவலி, காய்ச்சல், உடல் வலி போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுவதைக் கண்டு சிலர் தடுப்பூசிக்குத் தடை போடுகின்றனர். தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் உயிரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பைத் தடுக்க முடியும். மேலும், மற்றவர்களுக்கு கொரோனா பரவுவதைத் தடுப்பூசி தடுக்கும் என்பதால் நம் அன்புக்குரியவர்கள், நெருக்கமானவர்கள், மற்றவர்களின் உயிரை நம்மால் காப்பாற்ற முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள். பக்கவிளைவுகளைத் தவிர்க்க மருத்துவர்கள் கூறும் வழிகாட்டுதல்களை பின்பற்றினாலே போதும்!