வரலாறு மீண்டும் திரும்புமா? 2021-22 பட்ஜெட் ட்ரீம் பட்ஜெட்டாகுமா?

 

வரலாறு மீண்டும் திரும்புமா? 2021-22 பட்ஜெட் ட்ரீம் பட்ஜெட்டாகுமா?

கடந்த ஒரு வாரத்தில் பங்குச்சந்தை வேகமான சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், இன்று தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜெட் அந்த நிலையை மாற்றுமா என்ற எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. குறிப்பாக, 1997-98 நிதியாண்டின் ‘ட்ரீம் பட்ஜெட்’ சாதனையை முறியடிக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.

வரலாறு மீண்டும் திரும்புமா? 2021-22 பட்ஜெட் ட்ரீம் பட்ஜெட்டாகுமா?

கடந்த மாதம் 20ஆம் தேதி 49, 792 புள்ளிகளில் வர்த்தகமான சென்செக்ஸில் 21ஆம் தேதி 50 ஆயிரம் புள்ளிகள் கடந்து வர்த்தகம் செய்யப்பட்டது. வரலாற்றிலேயே முதல்முறையாக இந்நிகழ்வு அரங்கேறியது. முதலீட்டாளர்களுக்கும் நல்ல லாபத்தை ஈட்டிக் கொடுத்தது. ஆனால், அடுத்த நாளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகச் சந்தை சரிவை நோக்கிச் சென்றது. இந்த நிதியாண்டின் பட்ஜெட்டை நம்பிய முதலீட்டாளர்களுக்கு கடந்த வாரம் வெளியான பொருளாதார ஆய்வறிக்கை நம்பிக்கையின்மையைக் கொடுத்தது.

சர்வதேச அளவில் மாறாத கொரோனா தொற்று பாதிப்பு, பொருளாதார ஆய்வறிக்கையின் தாக்கம் ஆகியவற்றின் காரணமாக ஒருசில வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையை விட்டு வெளியேற தொடங்கிவிட்டனர். சந்தையில் நம்பிக்கையளிக்கக் கூடிய பங்குகளான ஐடி, வங்கி ஆகியவற்றில் ஏற்பட்ட எதிர்பாராத சரிவு உள்ளூர் முதலீட்டாளர்களையும் அசைத்துப் பார்த்திருக்கிறது. கடந்த ஒரு வார காலத்தில் 3 லட்சம் கோடிக்கும் மேலான முதலீட்டை அவர்கள் இழந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வரலாறு மீண்டும் திரும்புமா? 2021-22 பட்ஜெட் ட்ரீம் பட்ஜெட்டாகுமா?

இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருப்பதால் பங்குச்சந்தை ஏற்றத்துடன் ஆரம்பித்திருக்கிறது. அதே ஏற்றம் நீடிக்குமா? மீண்டும் உயர்வை நோக்கிச் சென்று முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுக்குமா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. 1997-98 நிதியாண்டில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் இன்றளவும் ஒரு ட்ரீம் பட்ஜெட் என்று பெருமையாக அழைக்கப்படுகிறது. அந்தப் பட்ஜெட்டுக்குப் பின் ஒரு வாரத்தில் பங்குச்சந்தை 7 சதவீதம் வளர்ச்சி கண்டது. அந்தப் பட்ஜெட்டின் சாதனையை இன்றைய பட்ஜெட் முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

1997-98 பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி அளவீடுகள் 30 சதவீதமாகக் குறைக்கப்பட்டது, தொழிற்துறை வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதான வரிச் சுமை குறைக்கும் விதமாகக் கார்ப்பரேட் வரி குறைக்கப்பட்டது. பல்வேறு சர்சார்ஜ் (surcharge) எனப்படும் கூடுதல் வரி ஆகியவை நீக்கப்பட்டன. இந்தியாவில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வழிவகுக்கப்பட்டது.

வரலாறு மீண்டும் திரும்புமா? 2021-22 பட்ஜெட் ட்ரீம் பட்ஜெட்டாகுமா?

அப்போது தான் முதல் முறையாக அரசின் கையிருப்பில் இருக்கும் பங்குகளை விற்பனை செய்து முதலீட்டைத் திரட்டும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியப் பொருளாதார வரலாற்றில் மிக மிக முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்பட்ட பட்ஜெட் அனைவராலும் ட்ரீம் பட்ஜெட் என வருணிக்கப்பட்டது. இதே வரலாறு மீண்டும் திரும்புமா? பங்குச்சந்தை வளர்ச்சி காணுமா? முதலீட்டாளர்கள் மகிழ்வார்களா? விடை சிறிது நேரத்தில்…