கொரோனா 2ம் அலையிலிருந்து தப்பிக்க என்ன வழி?

 

கொரோனா 2ம் அலையிலிருந்து தப்பிக்க என்ன வழி?

கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உயிரிழப்பைத் தவிர்க்க ஊரடங்கு கட்டுப்பாடு முதல் ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு வரை பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது.

இரண்டாம் அலைத் தொற்றில் தங்களுக்கு எப்படி கொரோனா வந்தது என்று தெரியாமல் பலரும் அச்சத்தில் உள்ளனர். முதல் தொற்றில் கொரோனா நோயாளியை சந்தித்ததன் மூலமே பலருக்கும் தொற்று பரவியது. ஆனால் தற்போது உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பல மடங்கு வேகமாகப் பரவவே ஒருவருக்கு எப்படி கொரோனா வந்தது என்பதைக் கண்டறிய முடியாத சூழல் உள்ளது.

கொரோனா 2ம் அலையிலிருந்து தப்பிக்க என்ன வழி?

இந்த நிலையில் கொரோனாத் தொற்றுக்கு ஆளாகாமல் இருக்க ஒன்றும் செய்யாமல் வீட்டிலேயே இருங்கள் என்கின்றனர் மருத்துவர்கள். அடுத்த நான்கு வாரங்கள் மிகவும் சிக்கலான காலகட்டம் என்பதால் வீட்டில் இருப்பது நல்லது என்று அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா மிக வேகமாக பரவும் தன்மை கொண்டது என்பதால் மிக மிக அவசியத் தேவை இருந்தால் மட்டுமே வெளியே செல்ல வேண்டும்.

வெளியே செல்லும்போது என் 95 மாஸ்க் மற்றும் அதற்கு மேல் சர்ஜிக்கல் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும். வெளியே இருக்கும்போது எக்காரணத்தைக் கொண்டும் மாஸ்கை கழற்ற வேண்டாம்.

கைகளை அவ்வப்போது சோப் போட்டு கழுவி சுத்தம் செய்ய வேண்டும். வீட்டுக்கு வெளியே எந்த பொருளையும் தொட வேண்டாம். அப்படி தொட்டால் ஹேண்ட் சானிடைசர் பயன்படுத்தி அவ்வப்போது கைகளை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.

வெளியே சென்று வந்த பிறகு உடைகளைக் கழற்றி துவைக்க போட்டுவிடுங்கள். மிகவும் பாதுகாப்பான முறையில் துவைத்து உலர்த்த வேண்டும்.

குழந்தைகளுக்கும் இந்த புதிய உருமாற்றம் அடைந்த தொற்று பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, அவர்களுக்கு பாதிப்பு, அறிகுறிகள் பற்றி சொல்லிக்கொடுங்கள்.

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.

இந்த நடைமுறைகளைத் தீவிரமாக பின்பற்றுவதன் மூலம் மட்டுமே 2ம் அலை தொற்றிலிருந்து தப்பிக்க முடியும்!