• April
    04
    Saturday

Main Area

Main



கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம்: உயர்மட்ட விசாரணை குழு அமைப்பு

blood
blood

விருதுநகர்: கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி தொற்றுடைய ரத்தம் செலுத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்த உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 8 மாத கர்ப்பிணி பெண்ணின் உடலில் சிவப்பு அணுக்கள் குறைவாக இருப்பதாக கூறி அவருக்கு உடனடியாக ரத்தம் ஏற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, அப்பெண்ணுக்கு ரத்த வங்கியில் இருந்து ரத்தம் பெறப்பட்டு ஏற்றப்பட்டுள்ளது. ஆனால், அப்பெண்ணுக்கு ஏற்றப்பட்ட ரத்தத்தில் எச்.ஐ.வி தொற்று இருப்பதாக தற்போது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட அனைவரது மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பெண்ணின் குடும்பத்தினர், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் மனோகரன், துணை இயக்குநர் பழனிச்சாமி ஆகியோர் சம்பந்தப்பட்ட ரத்த வங்கி பொறுப்பாளர்களிடம் விசாரணை நடத்தி, ரத்த வங்கி ஊழியரை பணியிடை நீக்கம் செய்தனர். மேலும், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரத்த வங்கிகளில் உள்ள ரத்தத்தை மறு பரிசோதனை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் சாத்தூர் காவல் நிலையம் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், மாவட்ட எஸ்.பி.-யிடம் ஒப்புதல் பெறப்பட்டு இன்றே விசாரணை நடத்தப்படும் என சாத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள விருதுநகர் சென்றுள்ளார். அதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள ரத்த வங்கிகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ரத்தம் பெறுவதற்கான விதிமுறைகளை முறையாக பின்பற்றவும், சரியாக பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி தொற்றுடைய ரத்தம் செலுத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்த உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை ரத்த வங்கி தலைவர் மருத்துவர் சிந்தா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவானது, விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள ரத்த வங்கிகளில் ஆய்வு நடத்த உள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.