கொழுப்பு சத்து மிக்க உணவுகள் சாப்பிட்டால் தப்பில்லை!

 

கொழுப்பு சத்து மிக்க உணவுகள் சாப்பிட்டால் தப்பில்லை!

அரிசி உணவு எடுத்துக்கொண்டால் உடல் எடை அதிகரிக்கும், அதிக கொழுப்பு சத்து உள்ள உணவு உட்கொண்டால் உடலில் கொழுப்பு அதிகரிக்கும் என்று சில நம்பிக்கைகள் அனைவர் மத்தியிலும் உள்ளது. இப்படி மக்கள் மத்தியில் உணவு தொடர்பாக காணப்படும் சில நம்பிக்கைகளும் அது உண்மைத் தன்மை பற்றியும் காண்போம்.

கொழுப்பு சத்து மிக்க உணவுகள் சாப்பிட்டால் தப்பில்லை!

கொழுப்பு மிக்க உணவு கெட்டது என்று பலரும் கொழுப்பு சத்து உள்ள உணவை சாப்பிட தயங்குகின்றனர். எண்ணெய் உணவு என்றாலே அலறும் நிலை உள்ளது. கொழுப்புச் சத்து மிக்க உணவுகள் கெடுதலானது என்பது தவறான நம்பிக்கையாகும். நம்முடைய உடலுக்கு தினசரி குறிப்பிட்ட அளவு கொழுப்பு சத்து தேவை. நம்முடைய உணவு கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு ஆகிய மூன்றால் ஆனது. ஒன்றை விட்டு ஒன்றை மட்டும் எடுப்பது பிரச்னையையே ஏற்படுத்தும்.

உதாரணத்துக்கு வைட்டமின் ஏ உள்ளிட்டவை கொழுப்பில் கரையக் கூடிய வைட்டமின் ஆகும். இது போன்ற ஊட்டச்சத்து கிரகிக்கப்பட கொழுப்பு சத்துள்ள உணவு தேவைப்படுகிறது. கொழுப்பு உணவைத் தவிர்க்கும் போது ஊட்டச்சத்து குறைந்து அதுவே பிரச்னையாக மாறிவிடும்.

தொடர்ந்து கொழுப்பு உள்ள உணவுகளைத் தவிர்த்து வந்தால் வளர்சிதை மாற்றப் பணியில் பாதிப்பு ஏற்படும். அதுவே இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் எனப்படும் இன்சுலின் சுரப்பு போதுமான அளவு இருந்தும் அது வீரியம் மிக்கதாக இல்லாத நிலையை ஏற்படுத்திவிடும்.

எனவே, உணவில் கொழுப்பு சத்து உள்ள உணவுக்கும் இடம் கொடுக்க வேண்டும். உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் கொழுப்பு சத்து குறைந்த உணவு எடுத்துக்கொள்ளலாம்.

நினைவில் கொள்ளுங்கள் எதுவுமே அளவுக்கு மீறினால் கெடுதல்தான். அதே போல் தேவையான அளவுக்கு குறைவாக எடுத்துக்கொள்வதும் கெடுதலான விஷயம்தான்!

அரிசி உணவு நல்லது இல்லை என்ற எண்ணமும் அதிகம் பேர் மத்தியில் உள்ளது. குறிப்பாக இளம் பெண்கள் மத்தியில் அரிசி சாதத்தை தவிர்ப்பது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. உடலை ஸ்லிம்மாக வைக்க அரிசி உணவு தவிர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது உண்மையில்லை, தினசரி கார்போஹைட்ரேட் நமக்குத் தேவை. அரிசியில் இருந்து புரதம், நார்ச்சத்து, ஃபோலேட், மாங்கனீசு, தயாமின், செலினியம், நியாசின், வைட்டமின் பி6, தாமிரம் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றன.

பட்டை தீட்டப்பட்ட அரிசிக்கு பதில் சிவப்பு அரிசி, பழுப்பரிசி எடுத்துக்கொள்வது நல்லது. சிவப்பு அரிசி சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இந்த வகை அரிசிகளில் உள்ள நார்ச்சத்து கொழுப்பைக் கரைத்து இதயத்தை பாதுகாக்கிறது. எனவே, அரிசியைத் தவிர்க்க வேண்டியது இல்லை. எந்த அரிசியை எடுக்கிறோம் என்பதில் கவனம் செலுத்தினாலே போதும்!