கர்ப்பகால உயர் ரத்த அழுத்தம்… தவிர்ப்பது எப்படி?

 

கர்ப்பகால உயர் ரத்த அழுத்தம்… தவிர்ப்பது எப்படி?

பெண்கள் தங்கள் உடல் நலனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய காலகட்டம் கர்ப்பகாலம். தங்கள் உடல் நலனை பராமரிப்பது, உடல் நிலை சரியாக இருப்பதை உறுதி செய்வது என்பதை தங்களை மட்டுமின்றி தங்கள் வயிற்றில் வளரும் சிசுவின் நலனிலும் சம்பந்தப்பட்டதாக உள்ளது. எனவே, டாக்டர்கள் பரிந்துரைக்கும் எதையும் அசட்டை செய்துவிடக் கூடாது.

கர்ப்பகால உயர் ரத்த அழுத்தம்… தவிர்ப்பது எப்படி?

கர்ப்பகாலத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து எப்படி கர்ப்பகால சர்க்கரை நோய் வருகிறதோ, அது போல உயர் ரத்த அழுத்த பாதிப்பும் வரலாம். குழந்தை ஆரோக்கியமாக வளர, நல்ல முறையில் பிரசவம் நடக்க ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க வேண்டியது அவசியம். தங்கள் உடல் நலனை கவனிக்காமல் விட்டால் ரத்த அழுத்தம் அதிகரித்து பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடும்.

ரத்த அழுத்தம் அதிகரிப்பு காரணமாக நஞ்சுக்கொடிக்கு பாயும் ரத்தத்தின் அளவு குறைந்துவிடும். இதன் காரணமாக குழந்தைக்கு செல்லும் ரத்தம் குறைவதால் குழந்தையின் வளர்ச்சி தடைப்படும்.

கர்ப்பகாலத்தில் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட உடல் பருமன், மரபியல் ரீதியில் குடும்பத்தில் பெரியவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பது, 35 வயதுக்கு மேல் கருத்தரிப்பது, முதல் கர்ப்பத்தின் போது உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டது, செயற்கை முறையில் கருத்தரித்தது, சர்க்கரை நோய், ஆட்டோ இம்யூன் நோய் பாதிப்பு, உடல் உழைப்பு இன்மை போன்றவை முக்கிய காரணிகளாக உள்ளன.

கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளது என்பதை அதிகப்படியான வாந்தி, குமட்டல், தலைவலி, சோர்வு, காலில் வீக்கம், திடீரென்று உடல் எடை அதிகரிப்பது, மேல் வயிற்றில் வலி, சிறுநீர் அளவு குறைதல், மூச்சு விட சிரமம், சிறுநீரில் அதிக அளவில் புரதம் வெளியேறுவது போன்ற அறிகுறிகள் மூலம் அறியலாம்.

பொதுவாக கர்ப்பிணிகளுக்கு 20வது வாரத்தில் உயர் ரத்த அழுத்த பாதிப்பு வரலாம். கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்தம் வருவது தற்காலிகமானதுதான். இருப்பினும் இந்த பெண்களுக்கு எதிர்காலத்தில் உயர் ரத்த அழுத்த நோய் வருவதற்கான வாய்ப்பை இது அதிகரித்துவிடுகிறது.

கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது சிறுநீரகம், கல்லீரல், மூளை போன்ற உறுப்புகளை பாதிப்படையச் செய்யலாம். இதன் காரணமாக தாய்க்கும் சேய்க்கும் பாதிப்பு வரலாம். எனவே, ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைப்பது அவசியம்.

கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்க, துடிப்பான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும். கர்ப்ப காலம் என்பதால் அதீத ஓய்வு கூடாது. சிறு சிறு வேலைகள் செய்வது, உடற்பயிற்சி செய்வதன் மூலம் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.

ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். உப்பு அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் மன அழுத்தம் கூடாது. இது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் முக்கிய காரணியாக உள்ளது. மருத்துவர் பரிந்துரைத்ததைப் பின்பற்ற வேண்டும். தொடர்ந்து மருத்துவரை சந்தித்து ரத்த அழுத்தம் கட்டுக்குள் உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். ரத்த அழுத்தம் அதிகரிப்பது தெரிந்தால் உடனடியாக சிகிச்சை பெற இது உதவும்!