செம்பருத்தி டீ குடிப்பது நல்லதா?

 

செம்பருத்தி டீ குடிப்பது நல்லதா?

ஒரு காலத்தில் சுக்கு மல்லி காபி தான் கிராமப்புற மக்களின் தினசரி பழக்கமாக இருந்தது. டிகிரி காபி, டீ எல்லாவற்றையும் விட சுக்கு மல்லி காபியையே பலரும் விரும்பினர். நாகரீகம் மாற மாற காபி, டீ-க்கு மாறினர். தற்போது பால் சேர்த்து எடுத்துக்கொள்ளும் காபி, டீ ஆரோக்கியமில்லை என்று தெரிந்த பிறகு க்ரீன் டீ, க்ரீன் காபி, மூலிகை டீ என்று மாறிக்கொண்டிருக்கின்றனர்.

செம்பருத்தி டீ குடிப்பது நல்லதா?

அந்த வகையில் க்ரீன் டீ அளவுக்கு தற்போது பிரபலமாகி வரும் பானம் செம்பருத்தி டீ. இதற்கு முக்கிய காரணம் க்ரீன் டீயைக் காட்டிலும் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடண்ட் இதில் இருப்பதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

தற்போது பரபரப்பாக விற்பனையாகும் மூலிகை டீ-க்களில் முதலிடம் செம்பருத்தி டீ-க்குத்தான் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அந்த அளவுக்கு அதில் ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறைவாக உள்ளது. ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறைவாக உள்ளது என்றால் அது ஃப்ரீ ராடிக்கல்ஸ் பாதிப்பில் இருந்து உடலைக் காப்பாற்றி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது என்று அர்த்தம். அடர் சிவப்பு நிறத்தில் உள்ள செம்பருத்தியில் anthocyanin என்ற ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறைவாக உள்ளது. இது பல்வேறு நீண்ட கால வியாதிகள் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் செம்பருத்திக்கு உள்ளது. தொடர்ந்து செம்பருத்தி தேநீர் அருந்தி வருபவர்களுக்கு ரத்த அழுத்தம் சராசரியாக டயஸ்டாலிக் அளவு 7 எம்எம் எச்ஜி அளவுக்கும் சிஸ்டாலிக் அளவு 3.5 எம்எம் எச்ஜி அளவுக்கும் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

செம்பருத்தியில் உள்ள ரசாயனங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டதாக உள்ளது. 2013ம் ஆண்டு ஆய்வு ஒன்று ரத்தத்தில் சர்க்கரை அளவில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை செம்பருத்தி ஏற்படுத்துகிறது என்று கண்டறிந்துள்ளது.

எலிகளுக்கு நடத்தப்பட்ட ஆய்வில் ரத்தத்தில் கொழுப்பு அளவை செம்பருத்தி குறைத்திருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து செம்பருத்தி டீ அருந்தி வருபவர்களுக்கு ரத்தத்தில் கொழுப்பு அளவு மட்டுமின்றி சர்க்கரை அளவும் கட்டுக்குள் வருகிறது. மேலும் இது கெட்ட கொழுப்பு எனப்படும் எல்டிஎல் அளவைக் குறைத்து நல்ல கொழுப்பான எச்.டி.எல் அளவை அதிகரிக்க உதவுகிறது. ரத்த அழுத்தம், கொழுப்பு அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க செம்பருத்தி உதவுகிறது.

இது மட்டுமின்றி சருமத்தின் ஆரோக்கியத்தைக் காக்கவும் இது உதவுகிறது. இதில் வைட்டமின் சி நிறைவாக உள்ளது. இது சருமத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்கிறது.