நெஞ்சு எரிச்சல்… ஏன், எதற்கு, தீர்வு என்ன?

 

நெஞ்சு எரிச்சல்… ஏன், எதற்கு, தீர்வு என்ன?

நெஞ்சு எரிச்சல், ஆங்கிலத்தில் ‘heartburn’  என்றால் நுரையீரல், இதயத்தில் ஏற்படும் பிரச்னை இல்லை. அதே நேரத்தில் மாரடைப்பு ஏற்படுத்துவது போன்ற வலி, அறிகுறியை நெஞ்செரிச்சல் ஏற்படுத்துகிறது.

நம்முடைய இரைப்பையில் சுரக்கும் அமிலங்கள் கலந்த உணவு esophagus எனப்படும் உணவுக்குழாய்க்கு வரும்போது ஏற்படும் எரிச்சலையே எதுகளிப்பு அல்லது நெஞ்சு எரிச்சல் என்று கூறுகிறோம். இந்த வலி அல்லது எரிச்சல் நெஞ்சு எலும்பைத் தாண்டி தாடை வரையிலும் நீடிக்கலாம். குனிந்து நிமிரும் போது இந்த வலியின் தாக்கம் மேலும் அதிகரிக்கலாம். இது தவிர வாயில் ஒருவித கசப்பு சுவை ஏற்படுகிறது என்றால் நெஞ்சு எரிச்சல் பிரச்னை உள்ளது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

நெஞ்சு எரிச்சல்… ஏன், எதற்கு, தீர்வு என்ன?

நெஞ்சு எரிச்சல் ஏற்படப் பல காரணங்கள் உள்ளன. நாம் உட்கொள்ளும் உணவு, உணவுக் குழாய் வழியாக இரைப்பைக்குச் செல்கிறது. இரைப்பையில் அதில் அமிலங்கள், நொதிகள் சேர்க்கப்பட்டு, செரிமானத்துக்கு ஏற்ற வகையில் மாற்றப்படுகிறது. அமிலங்களை தாங்கும் அளவுக்கு இரைப்பை இருக்கும். ஆனால் உணவுக் குழாய் அப்படி இல்லை. எனவே, இரைப்பைக்கு சென்ற உணவு மீண்டும் உணவு குழாய்க்கு வருவதைத் தடுக்க தடுப்பணை போன்ற அமைப்பு இரைப்பை – உணவு குழாய் இணையும் இடத்தில் இருக்கும். இந்த கதவு போன்ற அமைப்பு பாதிக்கப்படும்போது, சரியாக மூடாத நிலையில் அமிலம் கலந்த உணவு, உணவுக் குழாய்க்கு வந்து புண்களை ஏற்படுத்திவிடும். இதையே நெஞ்சு எரிச்சல் என்கிறோம்.

ஆசை மிகுதியால் உணவை அதிகம் சாப்பிடுவது, உடல் பருமன், கர்ப்பகாலம், மலச்சிக்கல் போன்றவை நெஞ்சு எரிச்சல் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளன.

சில வகையான உணவுகள் இரைப்பையில் அதிக அமில உற்பத்தியைத் தூண்டுகின்றன. குறிப்பாக தக்காளி, சிட்ரஸ் பழங்கள், பூண்டு, காபி, ஆல்கஹால், சாக்லெட் போன்றவை சாப்பிடும் போது எதுக்களிப்பு பிரச்னை வரலாம்.

ஒருவருக்கு தொடர்ந்து நெஞ்சு எரிச்சல் பிரச்னை இருந்தால், உணவு உட்கொள்ள, விழுங்க முடியாத நிலை இருந்தால், அடிக்கடி சுய மருத்துவம் எடுத்துக்கொள்ளும் நிலையில் இருந்தால், குமட்டல் – வாந்தி உணர்வு இருந்தால், பசியின்மை உணர்வு அதிகரித்து உடல் எடை குறைந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு, சரியான அளவில் உணவு, சாப்பிட்ட உடன் தூங்கச் செல்வதைத் தவிர்ப்பது, நெஞ்சு எரிச்சலைத் தூண்டும் உணவுகளைத் தவிர்ப்பது, சிகரெட் – மது பழக்கத்தைக் கைவிடுவது, மருத்துவ ஆலோசனை பெற்று சரியான மாத்திரைகளை எடுத்துக்கொள்வது போன்றவற்றின் மூலம் நெஞ்சு எரிச்சல் பிரச்னைக்கு தீர்வு காணலாம்.