மாரடைப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதல் உதவிகள் என்ன?

 

மாரடைப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதல் உதவிகள் என்ன?

இந்தியாவில் மிகப் பெரிய தொற்றா உயிர்க்கொல்லிகளில் ஒன்றாக மாரடைப்பு நோய் உள்ளது. இதய ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாக மாரடைப்பு வருகிறது. உடனடியாக ஆஞ்சியோ உள்ளிட்ட சிகிச்சை அளிக்கும் வசதி உள்ள மருத்துவமனைக்கு நோயாளியை கொண்டு சென்றால் உயிரைக் காப்பாற்றலாம். பல நேரங்களில் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத காரணத்தால் உயிரிழப்பு ஏற்படுவதை நம்மால் தடுக்க முடிவதில்லை.

மாரடைப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதல் உதவிகள் என்ன?

மாரடைப்பு பெரியவர்களுக்குத்தான் வரும் என்று இல்லை. வாழ்வியல் மாற்றம் காரணமாக 20 வயது இளைஞருக்கு கூட மாரடைப்பு வருவதை காண முடிகிறது, மாரடைப்பு ஏற்பட்டால் உடனடியாக இதய நோய்க்கு சிகிச்சை அளிக்கும் வசதி கொண்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். 108 ஆம்புலன்ஸ் சேவையை அழைக்க வேண்டும்.

நெஞ்சு வலி, நெஞ்சில் பாரம், அழுத்தம் போன்றவை இருந்தால் அது நெஞ்சுவலியாக இருக்கலாம். வலியானது தோள்பட்டை, கை, பின் முதுகு, கழுத்து, தாடை வரை பரவி, பல் வலியாகக் கூட வெளிப்படலாம். இப்படி இருந்தால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். இவற்றுடன் குமட்டல், நெஞ்சு எரிச்சல், சுவாசித்தலில் பாதிப்பு, அதீத வியர்வை இருக்கலாம்.

மாரடைப்பு வந்தவரை 15 நிமிடங்களுக்குள் மருத்துவமனைக்கு கொண்டு செல்வது மிகவும் நல்லது. எனவே, நம் வீட்டைச் சுற்றி உள்ள இதய நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மையங்கள் எவை என்பதை முன் கூட்டியே பார்த்து வைத்துக்கொள்வது நல்லது. 108 ஆம்புலன்ஸில் நெஞ்சுவலிக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கும் வசதிகள் இருக்கும் என்பதால் அதை அணுகலாம்.

வீட்டில் ஆஸ்பிரின் மாத்திரையை வைத்திருப்பது நல்லது. அது ரத்தம் உறைதலைத் தடுக்கும். இதன் காரணமாக இதய தசைகள் உயிரிழப்பு தடுக்கப்படும். எனவே, வீட்டில் எப்போதும் ஆஸ்பிரின் மாத்திரை வைத்திருப்பது நல்லது. ஆஸ்பிரின் மாத்திரையை விழுங்க வேண்டாம். நாக்குக்கு அடியில் வைத்துச் சப்பி சாப்பிடுவது நல்லது.

டாக்டர் பரிந்துரைத்திருந்தால் நைட்ரோகிளசரின் மாத்திரை எடுத்துக்கொள்ளலாம். பொதுவாக 30 – 35 வயததைக் கடந்தவர்கள் இதய நோய் சிகிச்சை நிபுணரை அணுகி அவசர கால மாத்திரைகள் பற்றிக் கேட்டு, அவற்றை வீட்டில் வைத்திருப்பது நல்லது.

நோயாளி மயக்க நிலைக்கு சென்றுவிட்டால், இதயத்துடிப்பு நின்றுவிட்டால் சிபிஆர் முதலுதவி வழங்கலாம். இதன் காரணமாக இதயம் மீண்டும் துடிக்க ஆரம்பிக்க வாய்ப்புள்ளது.