ஒவ்வொரு நோய்க்கும் மருந்தாகும் ஒவ்வொரு வகை வாழைப்பழத்தினை ஒவ்வொரு நாளும் சாப்பிடலாம்

 

ஒவ்வொரு நோய்க்கும் மருந்தாகும் ஒவ்வொரு வகை வாழைப்பழத்தினை ஒவ்வொரு நாளும் சாப்பிடலாம்

வாழைப்பழத்திற்கு நம் அன்றாட வாழ்வில் ஓர் அன்பான இடம் உண்டு. ஏனெனில், ஆயிரம் பழவகைகள் இருந்தாலும், நம் வழக்கு மொழியில் பழம்என்ற பொதுப் பெயரைச் சொன்னால், அது வாழையையே குறிக்கிறது.

நைட்டு ஒரு பழம் சாப்டா.. காலைல கஷ்டமில்லாம டவுன்லோட் பண்ணிடலாம்!என ஜீரண மண்டல நண்பனாய் நம் சமூகம் அடையாளப்படுத்துவதும் வாழையைத்தான்.

உலகில் வாழையின் தோற்றமும் அதன் முக்கிய பயிரிடு பூமியாய் விளங்குவதும் இந்தியாவின் கிழக்குக் கடற்கரை மாநிலங்கள் மற்றும் மலேசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட தென்கிழக்கு நாடுகள். உலகில் மொத்தம் 3000 வாழை வகைகளாம்! இந்தியாவில் பரவலாகப் பயிரிடப்படுவது 30! அளவிலும், ருசியிலும், ஊட்டச்சத்திலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை!

ஒவ்வொரு நோய்க்கும் மருந்தாகும் ஒவ்வொரு வகை வாழைப்பழத்தினை ஒவ்வொரு நாளும் சாப்பிடலாம்

பூவன் பழம்: அளவில் சிறியவை. ஒரு வாழைக்குலையில் 100 முதல் 150 பழங்கள் உண்டு. மூலநோய்களுக்கு உகந்தது.

பேயன் பழம்: வயிறு மற்றும் குடல் புண்கள் ஆறும். உடல்சூடு தணியும்.

மலைப்பழம் (பச்சைப் பழம்): குழந்தைகளின் வெரைட்டி. இரத்த விருத்தி செய்யும்.

ரஸ்தாளி: மருத்துவ குணங்கள் குறைவெனினும், ருசியில் உயர்ந்தது. பழங்களைக் கொண்டு தயாரிக்கும் இனிப்புகள், சாலட்களில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது.

மாந்தன்: உடல் வறட்சியைப் போக்கும்; காமாலையைத் தடுக்கும்.

நேந்திரம்பழம்: பச்சையாகவோ, அவித்தோ, சிப்ஸ் வடிவிலோ உண்ணப்படுகிறது. குடற்புழுக்கள் நீக்குகிறது. புரதம் அதிகம் உண்டு.

கற்பூரவள்ளி: வாழை ரகங்களிலிலேயே மிக இனிப்பானது. நீண்ட நாட்களுக்கு வைத்து உண்பது கடினம்; கனிந்து முற்றிவிடும்.

செவ்வாழை: நோய் எதிர்ப்பு சக்தி; உடலில் தாது பலமும் அதிகரிக்கும்.

கதளி: (பூவன் பழத்தின் ரகம்): ஆன்டி ஆக்சிடென்ட் தன்மை உள்ளதால் செல்களின் செயல்பாட்டை சீர்செய்கிறது.

எலைச்சி: சிறியவையாயினும் மிகச் சுவையானவை; மலச்சிக்கலுக்கு சிறந்தது.

கேவென்டிஷ்: ஏற்றுமதி ரக வாழை; பளபள மஞ்சள் நிறமும்; மிக நீண்ட நாள் கெடாத தன்மையும் கொண்டது. இந்த வகையைச் சுற்றி பல சர்ச்சைகள் உண்டு.

வாழை உற்பத்தியில் உலகில் முதலிடம் யாருக்கு தெரியுமா? இந்தியர்களுக்குத்தான். உலகின் மொத்த உற்பத்தியில் 20 சதவீதம். இந்தியாவில் முன்னிலை வகிப்பதோ நம் தமிழகம்தான். இதில் மற்றொரு ஆரோக்கியமான சங்கதி யாதெனில், நம் சுயதேவைக்காகவும், உள்ளூர் சந்தை விற்பனைக்காகவும் மட்டுமே பெரும்பாலான உற்பத்தி பயன்படுகிறது. வாழைப்பழ விவசாயமும், வணிகமும் நமக்கு தேவையானதை நாமே உற்பத்தி செய்தலும், வணிகப்படுத்தலும்என்கிற சுதேசிநிலையை இன்னும் இழந்துவிடாமல் இருக்கிறது என்பதற்கு ஓர் அத்தாட்சி. ஓர் நம்பிக்கை.

இதற்கு முக்கிய காரணமாய் விளங்குவது, ‘வாழையை ஒரு வகைப் (Mono variety- Mono culture) பயிராக அல்லாமல், பல வகைப் பயிராக (Poly Variety – Poly culture) விளைவிப்பதேஎன்கின்றனர் விவசாய வல்லுனர்கள். மேலும், “இதனால், பயிர்களில் ஒருவகை நோய்வாய்ப்பட்டாலும், மற்றொரு வகை சாகுபடிக்கு கைகொடுத்து விடுகிறது.இதனால் விவசாயிக்கும் பாதுகாப்பு, நுகர்வோருக்கும் பலவித சுவை, பலவித ரகம்.