சருமப் பொலிவைத் தரும் சப்போட்டா!

 

சருமப் பொலிவைத் தரும் சப்போட்டா!

அதிக இனிப்புச் சுவை மிக்க பழங்களுள் ஒன்று சப்போட்டா. அதனாலேயே சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ளக் கூடாத பழங்களில் முதல் வரிசையில் சப்போட்டாவும் உள்ளது. மா, பலா மாதிரி அதிக கலோரி கொண்ட பழம் சப்போட்டா.

100 கிராம் சப்போட்டாவில் 83 கலோரி உள்ளது. இதில் அதிக அளவில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி உள்ளிட்டவை உள்ளன. உடலில் ஆன்டி இன்ஃபிளமேட்டரியாக, ஆன்டி வைரலாக, ஆன்டி பாக்டீரியலாக சப்போட்டா செயல்படுகிறது. பொட்டாசியம், சோடியம், தாமிரம், இரும்பு, மக்னீஷியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இதில் அதிக அளவில் உள்ளன.

சருமப் பொலிவைத் தரும் சப்போட்டா!

சப்போட்டோவில் அதிக குளுக்கோஸ் உள்ளது. அது சாப்பிட்ட உடனேயே கிரகிக்கப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது. இதனால், உடலுக்கு உடனடி எனெர்ஜி கிடைக்கிறது. எனவே, அதிக வொர்க் அவுட் செய்யும் நேரத்தில் சப்போட்டா எடுத்துக்கொள்ளலாம். அதிக ஆற்றல் தேவைப்படும் குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர், கர்ப்பிணிகள் இதை கொஞ்சமாக எடுத்துக்கொள்ளலாம்.

இதில் உள்ள வைட்டமின் சி மிகச்சிறந்த ஆன்டிஆக்ஸிடண்டாக செயல்பட்டு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. இதில் உள்ள பாலிஃபீனால்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. இது மிகச்சிறந்த ஆன்டி பாக்டீரியல், ஆன்டி வைரல். எனவே, தொற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கும்.

இதில் உள்ள வைட்டமின் சி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் சருமத்தின் பொலிவை மேம்படுத்த உதவுகிறது. அதில் உள்ள வைட்டமின் இ சருமத்துக்கு தேவையான ஈரப்பதத்தைத் தக்க வைக்க உதவி சருமத்தைப் பொலிவாக்குகிறது. இதன் ஆன்டிஆக்ஸிடண்ட்கள் வயோதிகத்தைத் தள்ளிப்போட உதவுகின்றன. சருமத்தில் ஏற்படக்கூடிய வீக்கங்களை இது போக்குகிறது.

சருமத்தைப் போலவே முடியின் வளர்ச்சிக்கும் இது துணை செய்கிறது. சப்போட்டா விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது.

இதில் அதிக நார்ச்சத்து உள்ளதால் வயிறு, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை காக்கிறது. இதில் உள்ள டேனின் என்ற ரசாயனம் வயிற்றில் அமிலங்கள் சுரப்பைச் சமநிலைப்படுத்துகிறது. இது மிகச்சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. இதனால் மலச்சிக்கல் பிரச்னை போக்குகிறது. சிறு குடலில் நோய்த் தொற்று பாதிப்பைப் போக்க உதவுகிறது.

சப்போட்டாவில் கால்சியம் சத்து நிறைவாக உள்ளது. மேலும் பாஸ்பரஸ், இரும்புச்சத்தும் உள்ளது. இவை எல்லாம் எலும்பின் ஆரோக்கியத்தை, உறுதி தன்மையை மேம்படுத்துகின்றன. இளம் வயதில் எலும்பு செல்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.