உடல் எடை குறைக்கும், எலும்பை உறுதியாக்கும் கேழ்வரகு!

 

உடல் எடை குறைக்கும், எலும்பை உறுதியாக்கும் கேழ்வரகு!

1970, 80கள் வரையிலும் நம்முடைய உணவுப் பழக்கத்தில் சிறுதானியம் முக்கிய இடத்தை பிடித்திருந்தது. எப்போது தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடையத் தொடங்கியதோ அப்போதே ஆரோக்கியமான சிறுதானிய உணவுகள் மறையத் தொடங்கின. ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் என பல மேற்கத்திய உணவு பழக்கங்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கின. இதன் விளைவு ஒரு காலத்தில் தொற்றா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது.

உடல் எடை குறைக்கும், எலும்பை உறுதியாக்கும் கேழ்வரகு!

தென் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கேழ்வரகு உணவு மிகவும் முக்கியமானது. கேழ்வரகு கஞ்சி, கூழ், தோசை, முருக்கு என கேழ்வரகைக் கொண்டு விதவிதமான உணவுகள் செய்தார்கள் நம் முன்னோர். இதனால் உடல் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கேழ்வரகின் நன்மைகள் பற்றிப் பார்ப்போம்.

கேழ்வரகு மிகவும் சிறிய சிறுதானியம். அரிசி போன்று இதை பாலீஷ் செய்ய முடியாது. அப்படியேதான் பயன்படுத்தியாக வேண்டும். கேழ்வரகு புரதச்சத்து நிறைந்த உணவு. சைவ உணவு உட்கொள்பவர்களுக்கு தேவையான அளவுக்கு புரதச்சத்து கேழ்வரகிலிருந்து பெறலாம்.

கேழ்வரகில் நார்ச்சத்து நிறைவாக உள்ளது. இதனால் இதை உட்கொண்டதும் நீண்ட நேரத்துக்கு வயிறு நிறைந்த உணர்வு இருக்கும். இது ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென்று அதிகரிப்பதைத் தடுக்கிறது. எனவே, காலை உணவாக கேழ்வரகை எடுத்துக்கொள்ளலாம். இதில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் உள்ளன. அவை உடல் எடை குறைக்கத் துணை செய்கின்றன.

கேழ்வரகில் முதுமையைத் தாமதப்படுத்தும் மூலக்கூறுகள் உள்ளதால் சருமத்துக்கு மிகவும் நல்லது. சருமத்தில் அரிப்பு, கருவளையம், சருமம் பொலிவிழப்பது போன்ற பிரச்னைகள் வராமல் கேழ்வரகு பாதுகாக்கிறது.

இதில் வைட்டமின் இ நிறைவாக உள்ளது. இது புண்களை ஆற்றும். கேழ்வரகில் உள்ள புரதம் முடி உறுதியாக இருக்கச் செய்யும். முடி உதிர்வைத் தடுக்கும்.

கேழ்வரகில் கால்சியம் நிறைவாக உள்ளது. எனவே, எலும்பு உறுதியாக குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம். 100 கிராம் கேழ்வரகில் 344 மி.கி அளவுக்கு கால்சியம் உள்ளது.

பாலூட்டும் தாய்மார்கள் பால் அதிக அளவில் சுரக்கக் கேழ்வரகு உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். இதில் உள்ள அமினோ அமிலங்கள் பால் சுரப்பைத் தூண்டுகின்றன. மேலும் கேழ்வரகில் இருந்து தாய் மற்றும் சேய்க்குத் தேவையான கால்சியம், இரும்புச் சத்தும் கிடைத்துவிடும்.