சர்க்கரை நோயாளிகளின் நண்பன் கொய்யா இலை!

 

சர்க்கரை நோயாளிகளின் நண்பன் கொய்யா இலை!

ஏழைகளின் ஆப்பிள் என்று சொல்லும் அளவுக்கு ஆப்பிளில் இருப்பதைக் காட்டிலும் அதிக ஊட்டச்சத்து கொண்ட பழம் கொய்யா. பழம் மட்டுமல்ல அதன் இலைகளும் மருத்துவப் பயன் கொண்டது. நம்முடைய சித்த மருத்துவத்தில் கொய்யா இலையும் பல்வேறு மருத்துவ சிகிச்சைகளில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

சர்க்கரை நோயாளிகளின் நண்பன் கொய்யா இலை!

வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொய்யா இலைக்கு உண்டு. ரத்தத்தில் கொலஸ்டிரால் அளவைக் கட்டுப்படுத்துகிறது. உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்படுகிறது. பார்வைத் திறனை மேம்படுத்துகிறது. புண்களை ஆற்றுகிறது. சருமத்தை பொலிவு பெறச் செய்கிறது.

கொய்யா இலையை வெந்நீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு ஆறவைத்து அந்த தண்ணீரை அருந்தி வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்ட பிறகு கொய்யா இலை நீரை அருந்தலாம்.

கொய்யா இலையில் பல வகையான வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள் உள்ளன. இவை இதய திசுக்கள் ஃப்ரீ ராடிக்கல் பாதிப்பு காரணமாக சிதைவுறுவதைத் தடுக்கின்றன. மேலும் இதில் அதிக அளவில் உள்ள பொட்டாசியம் மற்றும் கரையக் கூடிய நார்ச்சத்து உள்ளிட்டவையும் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

தொடர்ந்து கொய்யா இலை நீரை அருந்தி வந்தால் ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அளவு குறைந்து, நல்ல கொழுப்பு அளவு அதிகரிக்கிறது. கெட்ட கொழுப்பு அதிகரிப்பது இதய நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கும். கொய்யா இலை அதை குறைப்பதன் மூலம் இதயத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கிறது.

மாதவிலக்கு காலத்தில் அதிக வலியால் அவதியுறும் பெண்கள் கொய்யா இலை நீரை அருந்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வழக்கமாக பயன்படுத்தும் வலி நிவாரணிகளைக் காட்டிலும் அதிக ஆற்றல் கொண்டது கொய்யா இலை நீர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கொய்யா இலையின் சாறு புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டதாக உள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொய்யா இலையில் உள்ள அதிக ஆற்றல் மிக்க ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள் புற்றுநோய் செல்களை தாக்கி அழிக்கின்றன.

கொய்யா இலையில் வைட்டமின் சி நிறைவாக உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் நோய்த் தொற்றுக்கான வாய்ப்பு குறைகிறது.