காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால் மக்களிடம் நற்பெயரை இழந்து விட்டேன்… எச்.டி. குமாரசாமி

 

காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால் மக்களிடம் நற்பெயரை இழந்து விட்டேன்… எச்.டி. குமாரசாமி

கர்நாடகாவில் காங்கிரசுடன் கை கோர்த்ததால் மாநில மக்களிடம் சம்பாதித்த மற்றும் 12 ஆண்டுகள் பராமரித்த நற்பெயரை இழந்து விட்டேன் என்று மதசார்ப்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் எச்.டி. குமாரசாமி தெரிவித்தார்.

மதசார்ப்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரும், கர்நாடகாவின் முன்னாள் முதல்வருமான எச்.டி. குமாரசாமி மைசூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பா.ஜ.க.வுக்கு அதிகாரத்தை மாற்றவில்லை என்பதற்காக எனக்கு எதிராக பெரிய பிரச்சாரம் நடந்த போதிலும், 2006-07ம் ஆண்டில் (முதல்வராக இருந்த போது) மாநில மக்களிடம் நான் சம்பாதித்த நற்பெயரை 12 ஆண்டுகளாக நான் பராமரித்து வந்தேன்.

காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால் மக்களிடம் நற்பெயரை இழந்து விட்டேன்… எச்.டி. குமாரசாமி
எச்.டி.குமாரசாமி

ஆனால் காங்கிரசுடன் கைகோர்த்து அனைத்தும் அழிந்து விட்டது. மதசார்ப்பற்ற ஜனதா தளம் பா.ஜ.க.வின் பி டீம் என்று காங்கிரஸ் பிரச்சாரம் செய்தது. சித்தராமையா என்னை அவதூறு செய்ய திட்டமிட்டார், அதுதான் எனது அரசு வீழ்ச்சி அடைந்ததற்கு காரணம். நான் காங்கிரசுடன் கைகோர்த்து (கூட்டணி) இருக்கக் கூடாது. ஆனால் கட்சியின் தலைவர் எச்.டி. தேவகவுடாவின் வலியுறுத்தல் காரணமாக காங்கிரசுடன் கூட்டணி வைக்க ஒப்புக்கொண்டேன். இது தற்போது எனது கட்சி தனது வலிமையை இழக்க வழி வகுத்தது.

காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால் மக்களிடம் நற்பெயரை இழந்து விட்டேன்… எச்.டி. குமாரசாமி
சித்தராமையா

தேவகவுடாவின் உணர்ச்சிகரமான உணர்வுகளுக்கு நான் வலையில் விழுந்தேன். இதன் காரணமாக கடந்த மூன்று தேர்தல்களில் 28-40 இடங்களை வென்ற எனது கட்சி பாதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். குமாரசாமியின் குற்றச்சாட்டுக்கு சித்தராமையா பதிலடி கொடுத்துள்ளார். சித்தராமையா இது குறித்து கூறுகையில், எச்.டி. குமாரசாமி பொய் சொல்வதில் நிபுணர் மற்றும் கண்ணீர் சிந்துவது அவரது குடும்பத்தின் கலாச்சாரம் என்று தெரிவித்தார்.