பாதி வயிறு உணவு, கால் வயிறு நீர், கால் வயிறு காற்று..!

 

பாதி வயிறு உணவு, கால் வயிறு நீர், கால் வயிறு காற்று..!

உணவு உண்ணும் விஷயத்தில் நம்மில் பலருக்கு ஒழுக்கம் இல்லாததால்தான் பல்வேறு நோய்களில் சிக்கித் தவிக்கிறோம். நொறுங்கத்தின்றால் நூறு வயது என்பார்கள். ஆனால், நம்மில் பலர் நொறுக்குத்தீனிகளையே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். அதுவும் தொலைக்காட்சிகளைப் பார்த்தபடி கையில் கிடைத்த தீனிகளை உண்டு கொண்டிருக்கிறோம். இப்படிச் சாப்பிடும்போது வரைமுறையின்றி சாப்பிடுகிறோம். இதனால்தான் இன்றைய குழந்தைகள் உடல் பருத்து சிறுவயதிலேயே நோய்களின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.

பாதி வயிறு உணவு, கால் வயிறு நீர், கால் வயிறு காற்று..!உமிழ்நீர்:
உணவு உண்ணும்போது நம் கவனம் வேறு எதிலும் போகக்கூடாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஆனால், நம்மில் பலர் டி.வி பார்த்தபடி உண்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். நாம் ஒரு உணவை உண்பதற்காக தயாராகும்போது அது நம் மூளைக்குச் சென்று சேர்வதற்கே சில நிமிடங்கள் பிடிக்கும். ஆகவே, நின்று நிதானித்து சாப்பிடப் பழகவேண்டும். நாவில் உணவை வைத்ததும் சுவை அரும்புகள் சுவைக்கத் தொடங்கும். அந்தநேரத்தில் உமிழ்நீர் சுரக்கும். இப்படி பல செயல்பாடுகள் இயற்கையாக நிகழும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

உணவு உண்ணும்போது எவ்வளவுக்கு எவ்வளவு உமிழ்நீர் சுரக்கிறதோ அப்போதுதான் உண்ட உணவுகள் செரிமானமாகும். அவசர உலகம், போட்டி என்பதுபோன்ற பல்வேறு காரணங்களைச் சொல்லிக்கொண்டு வேகவேகமாக சாப்பிடுகிறோம். உமிழ்நீர் சரியாக சுரப்பதற்குமுன்பே, சுவை அரும்புகள் சுவைப்பதற்கு முன்பே, உணவு பற்றிய தகவல் மூளைக்குச் செல்வதற்குமுன்பே சாப்பிட்டு முடித்துவிடுகிறோம். இப்படிச் சாப்பிடுவதால் உடலியக்கம் என்னவாகும் என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பாதி வயிறு உணவு, கால் வயிறு நீர், கால் வயிறு காற்று..!தியானம்:
சாப்பிடும்போது நம் கவனம் முழுவதும் உணவில்தான் இருக்க வேண்டும். இது ஒருவகை தியானம் எனப்படுகிறது. இப்படிச் செய்தால் உணவு நன்றாக செரிமானமாவதுடன் நம் உடலுக்கு அதிக சக்தி கிடைக்கும். எனவே, இதுவிஷயத்தில் நாம் கவனம் செலுத்துவோம். உண்ணுதல் என்பது சாதாரணமானதல்ல. அதற்கென சில வழிமுறைகள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

கை கழுவிய பிறகே சாப்பிட வேண்டும். அதேபோல் நாம் உணவு அருந்தும் இடம் அமைதியாக, தூய்மையானதாக இருக்க வேண்டும். சாப்பிடுவதற்குமுன் மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். அவரவர் தெய்வங்களை வழிபடுவது கூடுதல் சிறப்பு. சாப்பிடும்போது பேசக்கூடாது. குடும்பமாக உட்கார்ந்து சாப்பிடும்போது சிரித்துப் பேசி சாப்பிடுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அதுவும்கூட தவறுதான். வாயை மூடி பேசவும் என்று வேடிக்கையாகச் சொல்வார்கள். அதுபோல வாயை மூடிக்கொண்டு சாப்பிட வேண்டும்.

பாதி வயிறு உணவு, கால் வயிறு நீர், கால் வயிறு காற்று..!வாயை மூடி…
உணவை வாய்க்குள் செலுத்தியதும் வாயை மூடி நன்றாக உமிழ்நீரைச் சுரந்து கடித்துச் சுவைத்து அரவை மெஷினில் அரைப்பதுபோல அரைத்துச் சாப்பிட வேண்டும். பெரும்பாலும் திட உணவுகளை அரைத்துக் கூழாக்கி சாப்பிட வேண்டும். அப்படியானால்தான் அவற்றில் உள்ள சத்துகள் நம் உடலில் சேரும். வாய்க்குள் சென்றபிறகு அது உருமாற்றப்பட வேண்டும். இல்லையென்றால் கேடுதான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதை மனதின்முன் கொண்டுவர வேண்டும். ஒவ்வொரு பருக்கையையும் ரசித்து ருசித்துச் சாப்பிட வேண்டும். பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிட்டால்போதும். பாதி வயிறு உணவு, கால் வயிறு நீர், கால் வயிறு காற்று இருக்க வேண்டும். இதுதான் சரியான முறை.

சாப்பிட்டு முடித்ததும் வாய் கொப்பளிக்க வேண்டும். பல் இடுக்குகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் உணவு… குறிப்பாக இறைச்சித்துண்டுகளை அகற்ற வேண்டும். சாப்பிட்டு முடித்ததும் சுமார் 20 நிமிடங்கள் ஓய்வெடுக்க வேண்டும். அதன்பிறகே சில நிமிடங்கள் கழித்தே படுக்கைக்கு செல்ல வேண்டும். சாப்பிட்டவுடனே எத்தகைய கடினமான வேலையையும் செய்யக்கூடாது. இத்தகைய வழிமுறைகளை சரியாகப் பின்பற்றினால் நோய்கள் எதுவும் நம்மை நெருங்காது என்பதை மனதில்கொண்டு செயல்படுவோம்.