பித்தளை வேல் என்றால் ஸ்டாலின் வாங்கி இருக்க மாட்டார்; தங்க வேல் என்பதாலேயே வாங்கியிருக்கிறார்- ஹெச்.ராஜா

 

பித்தளை வேல் என்றால் ஸ்டாலின் வாங்கி இருக்க மாட்டார்; தங்க வேல் என்பதாலேயே வாங்கியிருக்கிறார்- ஹெச்.ராஜா

சிவகாசி தனியார் ஹோட்டலில் பட்டாசு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் சங்கம் மற்றும், தமிழ்நாடு பிரிண்டிங் , லாரி உரிமையாளர்கள் மற்றும் தீப்பெட்டி சங்கம் சார்பாக சிவகாசி நகர தொழில் முன்னேற்ற கருத்தரங்கு கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச். ராஜா, “பித்தளை வேல் என்றால் ஸ்டாலின் வாங்கி கூட இருக்க மாட்டார். 7 லட்சம் மதிப்புள்ள தங்க வேல் என்பதால் வாங்கிக்கொண்டுள்ளார். திமுக தனது பழைய விளையாட்டுகளில் இறங்கியுள்ளது. பொய்யான வாக்குறுதிகளை சொல்லி வாக்குகளைத் திருடி விடுவது போன்ற வேலையில் ஈடுபட்டுள்ளது. அறிவுபூர்வமாக சிந்திப்பவர்கள் திமுகவில் இல்லை, இரண்டு ஏக்கர் விவசாய நிலங்கள் வழங்கப்படும் எனத் தெரிவித்த அவர்கள் இலவசமாக டிவி மட்டும் வழங்கினார்கள், அவர்களது குடும்ப வருமானத்தை பெருக்க கொடுக்கப்பட்டது.

ஸ்டாலினுக்கு மன நோய் முற்றிவிட்டது. திமுக ஆட்சிக்கு வந்தால் 18 மணி நேரம் மின்தடை ஏற்படும். நில அபகரிப்பு சட்டம் என்பது திமுக காரணமாக கொண்டுவரப்பட்டது. மார்ச் மாதத்தில் தமிழகத்தில் நாகர்கோவில் உட்பட 2 நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் சேர்ந்து வரும். இந்துக்களுக்கு எதிரானவர் இல்லை என்றால் தைப்பூசத்திற்கு வாழ்த்து தெரிவித்து இருக்கலாம் ஏன் தெரிவிக்கவில்லை.

பித்தளை வேல் என்றால் ஸ்டாலின் வாங்கி இருக்க மாட்டார்; தங்க வேல் என்பதாலேயே வாங்கியிருக்கிறார்- ஹெச்.ராஜா

திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும் எனக் கூறுகின்றனர். ஒன்றிணைவோம் வா என்ற நிகழ்ச்சி நடத்தி ஒரு லட்சம் மனுக்கள் பெற்று ஆறு மாதங்களுக்கு மேலாக ஆகிவிட்டது. அதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. மக்கள் கொடுக்கும் புகார்கள் குப்பைத் தொட்டிக்கு மட்டுமே செல்லும். விவசாயக் கடன், கல்விக் கடன் ரத்து என்பது அரசியல் சட்டத்தைப் பற்றி அறிவு இல்லாத அறிவிப்பு.


ஒவ்வொரு முறையும் தேசியத் தலைவர்கள் தமிழகம் வருகையின்போது முதலமைச்சர், துணை முதலமைச்சர் சந்திக்க வேண்டும் என்பது அவசியமில்லை. இது மரபும் அல்ல.. சசிகலா சிறை தண்டனை முடித்து ஒரு சுதந்திரப் பறவையாக வந்திருக்கிறார். அவர் அதிமுக கொடி பயன்படுத்த வேண்டுமா? அல்லது அரசியலுக்கு வரலாமா வேண்டாமா? என்பது அவருடைய தனிப்பட்ட விருப்பம்” என தெரிவித்தார்.