ஜிம்முக்கு செல்பவர்கள் செய்யும் தவறுகள்!

 

ஜிம்முக்கு செல்பவர்கள் செய்யும் தவறுகள்!

உடலை ஃபிட்டாக வைத்திருக்க ஜிம்முக்கு செல்லும் பலரும் சில அடிப்படை ஆரோக்கிய ஒழுக்கங்களைப் பின்பற்றுவது இல்லை. என்ன மாதிரியான உடை, ஷூ போடலாம், என்ன மாதிரியான டயட் ஃபாலோ செய்யலாம், ப்ரோடீன் பவுடர் எடுத்துக்கொள்ளலாமா என்று பல விஷயங்களில் மெனக்கெடும் மக்கள் செய்யும் தவறுகள் சிலவற்றைக் காண்போம்!

ஜிம்முக்கு செல்பவர்கள் செய்யும் தவறுகள்!

ஜிம்முக்கு வந்ததும் சிலர் வெயிட் பயிற்சிகளை செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். பள்ளிக்கூடத்தில் சேர்ந்த உடனே 10ம் வகுப்பு பரிட்சை எழுத வேண்டும் என்று நினைப்பது எப்படியோ அது போலத்தான் ஜிம்மில் சேர்ந்த உடன் கடினமான வெயிட் பயிற்சிகளை செய்வதும். கொஞ்சம் கொஞ்சமாக கார்டியோவில் தொடங்கி நம்முடைய உடலை தயார்ப்படுத்திக் கொண்டு வெயிட் பயிற்சிக்கு செல்ல வேண்டும்.

பயிற்சிக்கு செல்பவர்கள் தூய்மையான டவல் ஒன்றை வைத்துக்கொள்ள வேண்டும். ஒருவர் டவலை மற்றவர் பயன்படுத்தக் கூடாது. அந்த டவலை தினமும் துவைத்துப் பயன்படுத்துவது நல்லது. ஒரே டவலை துவைக்காமல் கொண்டு வந்தால் அதுவே நாற்றம் அடிக்க காரணமாகிவிடும்.

ஜிம்மில் நன்கு வியர்க்க பயிற்சி செய்தவர்கள், பயிற்சி முடிந்ததும் ஜிம் உடையை கழற்றி தங்கள் பையில் வைத்து கொண்டு சென்றுவிடுவார்கள். அடுத்த நாள் துவைக்காமல் அதே துணியைக் கொண்டு வந்து போட்டுக்கொள்வார்கள். வியர்வை காரணமாக கிருமிகள் துணியில் பெருக்கம் அடைந்திருக்கும். அதே துணியை மீண்டும் அணிவதால் நோய்த் தொற்றுக்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

ஜிம்மில் உடல்பயிற்சி செய்து வீட்டுக்குத் திரும்பியதும் நன்கு குளிக்க வேண்டும். ஜிம் துணிகளைத் துவைத்து சூரிய ஒளியில் காயப்போட வேண்டும்.

ஜிம்முக்கு கொண்டு செல்லும் பையை யாரும் சுத்தம் செய்வது இல்லை. தினமும் அந்த பையில் தான் வியர்வையால் நனைந்த துணியை வைத்து எடுத்து வருவோம். கிருமித் தொற்று பையிலும் இருக்கலாம். எனவே, வீட்டுக்கு வந்ததும் சானிடைசர் கொண்டு அதை சுத்தப்படுத்த வேண்டும்.

ஜிம்முக்கு வரும்போது டியோடரன்ட், பெர்ஃபியூம் அடித்து வர வேண்டாம்.

ஒரு நேரத்தில் ஒரு கருவியைப் பயன்படுத்தி மட்டும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதீத ஆசை காரணமாக ஒரே நேரத்தில் பல பயிற்சிகளை செய்ய வேண்டாம். அது தசை கிழிவு உள்ளிட்ட பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

உடற்பயிற்சிக்கு வருபவர்கள் செய்யும் தவறு எடுத்த டம்பெல்ஸ் போன்ற கருவிகளை அதற்குரிய இடத்தில் வைப்பது இல்லை. காசு கொடுத்துத்தான் பயிற்சி செய்கிறோம், அதற்காக கண்ட இடத்தில் அதை போட்டுச் செல்வது சரியில்லை. மற்றவர்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதால் எதையும் எடுத்த இடத்தில் வைக்கும் பழக்கம் நல்லது.

ஆடை விஷயத்தில் கொஞ்சம் கவனம் தேவை. அரைகுறை ஆடைகள், முக்கிய உள் உறுப்புக்கள் வெளியே தெரியும்படி ஆடை அணிவதைத் தவிர்ப்பது நல்லது.