• March
    30
    Monday

Main Area

Main‘கிராமஃபோன்’ மறக்க முடியாத பழைய பாடலின் மறுபக்கம் - 4 ; பாடல்:எங்கேயோ கேட்ட ரிதம்… 

gramophone series part 4
gramophone series part 4

சில  பாடல்களை நம் வாழ்க்கையில் ஒரே ஒரு முறைதான் கேட்டிருப்போம். பேருந்து எங்கோ நிற்கும்போது கடைகளில் ஒலித்திருக்கும். அல்லது கிராமங்களில் வீட்டு விஷேசங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் மூலம்  காற்றில் பரவி  நம் காதுக்கு வந்திருக்கும். அதன் பிறகு நம்மால் அந்தப் பாடலை கேட்க முடியாமல் இருந்திருக்கும். பல காலங்களுக்குப் பிறகு  நாம் எப்போதாவது அந்த பாடலை கேட்க நேர்ந்தால் மனதில் ஏற்படும் உணர்வுகளை வார்த்தைகளால் விளக்க முடியாது.

gk venkatesh
இசைஞானியின் இசை ஆசான் 

இசைஞானி இளையராஜா அவர்கள் சென்னை வந்த ஆரம்ப காலத்தில் திரையுலகின் மூத்த இசையமைப்பாளர்கள்  ஜி.கே.வெங்கடேஷ், கோவர்த்தனம் ஆகியோரிடம் இசைக்கருவிகள் வாசிக்கும் பணியில் இருந்தார். இங்கு கிடார், பியானோ மற்றும் காம்போ ஆர்கன் வாசித்து வந்திருக்கிறார்.    
டிரினிட்டி பல்கலைக்கழகம் 1972-ம் ஆண்டு கிளாஸிக்கல் கிடாரில் ராஜாவுக்கு தங்கப்பதக்கம் வழங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருவரிடமும் வேலை செய்த  அனுபவத்தை  இளையராஜா சொல்லும்போது  “நான் ஜி.கே.வி. அவர்களிடம் அறுபது படங்களுக்கு மேல் பணியாற்றியிருக்கிறேன். கன்னடம் தெலுங்கு உட்பட தமிழில் மூன்று படம் என்று வேலை பார்த்திருக்கிறேன். அதோடு இசையமைப்பாளர் கோவர்த்தன் அவர்களும் நானும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றினோம். ‘வரப்பிரசாதம்‘ என்ற படத்தில் இசை உதவி ராஜா என்று பெயர் வரும்” என்று குறிப்பிடுகிறார். 

ilayaraja-help

இருவரிடமும் வேலை பார்த்த அந்த காலத்திலேயே  அற்புதமான டியூன்களை போட்டு காட்டியிருக்கிறார்  என்பதை சில பாடல்கள் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடியும். முதலில் ஜி.கே.வெங்கடேஷ் இசையமத்த ‘காஷ்மீர் காதலி’ என்ற படத்தில் இடபெற்ற  ஒரு பாடலை பார்ப்போம்.

kashmir-kadhali

“சங்கீதமே என் தெய்வீகமே ..
நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 
என் ராஜாங்கமே 
வானோரம் காணாத பேரின்பமே..”
இந்தப்பாடலில் பாடகர் ஜெயச்சந்திரனின் குரல் தங்கத்தால் இழைக்கப்பட்டதைப்போல் ஒலிக்கும். வரிகளின் முக்கியத்துவம் உணர்ந்து பாடியிருப்பார். பாடலில் வாணி ஜெயராம் ஆலாபனை முடிந்தவுடன் ஒலிக்கும் வயலின் இசை அப்படியே ஜாலியாக நடந்து போகும் உணர்வோடு ஒலிக்கும் ரம்யம், பல்லவி தொடங்கும் போது ட்ரம்ஸ், தபேலா இரண்டும் ஒரே காலப்பிரமாணத்தில் குதித்தோடும் அழகும் நம்மை மயங்க வைக்கும். 
 

நடிப்பாசை இல்லாத கதாநாயகன்! பிரபல மாடல் கதாநாயகி 

புலவர் புலமைபித்தன் எழுதிய பாடல் இது. பல்லவி முடியும் வரிகளில்  “வானோரம் காணாத பேரின்பமே..” என்று ஏகாரத்தில் அமைந்த டியூனை நெடில் சொற்களில் தமிழ் கொண்டு லாவகமாக கையாண்டிருப்பார். 
இந்த படத்தை பத்திரிகையாளர் மதிஒளி சண்முகம் இயக்கியிருந்தார். சீனியர் நடிகர் லதாவின் தம்பி ராஜ்குமார் தான் படத்தின் ஹீரோ. சினிமா ஆசையே இல்லாமல் இருந்தவரை அவரது அக்காவிடம் பேசி சம்மதிக்க வைத்திருக்கிறார். ஒரு வேலை முடிந்தது.அடுத்து ஹீரோயினாக யாரை ஒப்பந்தம் செய்யலாம் என்பதில் ஏகப்பட்ட குழப்பம்.
பல படங்களில் நடித்து எல்லோருக்கும் தெரிந்த முகமாக இருந்தால் சம்பளம் அதிகம் கொடுக்க வேண்டியிருக்கும் . அதனால் எல்லோருக்கும் தெரிந்த முகமாகவும் இருக்க வேண்டும் அதே சமயம் பட்ஜெட்டில் முடிய வேண்டும் என்று யோசித்த குழுவினருக்கு ஒரு யோசனை வந்திருக்கிறது. அன்றைய காலகட்டத்தில் ‘விக்கோ டெர்மரிக்’ என்ற அழகு சாதன சோப் விளம்பரம் ரொம்பவும் பேமஸ். அதில் நடித்து  இருந்த விளம்பர மாடல் ரஜனி ஷர்மா. அன்றைய காலகட்டத்தில் குக் கிராமம் தொடங்கி  நகர்புறம் வரைக்கும் அவரைத் தெரியாதவர்களே இல்லை! அந்தளவுக்கு துண்டு பிரசுரங்கள்,மூங்கில் தட்டியில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் மூலம் அவ்வளவு பிரபலமான மாடலாக இருந்தார். அவரையே தனது படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்தார் இயக்குனர் மதி ஒளி சண்முகம். 

rajni-sharma

இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ், இயக்குநருக்கு நெருங்கிய நண்பர். இதனால் அவர்தான் இசையமைத்தார்.  ஜி.கே.வி. அவர்களிடம் ஒரு பழக்கம் இருந்திருக்கிறது. அவர் ஹார்மோனியத்தை வாசிக்கும் போது வரும் நாதத்தைக்கேட்டுவிட்டு அவரே  உணர்ச்சிவயப்பட்டு அழுது விடுவார். இப்படி இசையை  சுவாசிக்கும்  இந்த மேதையிடம்தான் இளையராஜா தன் ஆரம்பக்காலத்து அனுபவத்தை பெற்றிருக்கிறார். 

காஷ்மீரால் குழம்பிப்போன ரசிகர்கள் 

தெலுங்கில் ஹிட் ஆன பல டியூன்களை ஜி.கே.வி. அவர்கள் தமிழுக்கு இசையமைக்கும் போது பயன்படுத்திக்கொள்வது வழக்கம். அதனால் ‘காஷ்மீர் காதலி  படத்திலும் தெலுங்கில் தான் போட்ட  டியூனையே இந்தப் படத்திற்கும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். காஷ்மீர் காதலி படம் வெளியான போது சென்னை தேவி தியேட்டரில் சௌகார்பேட்டை ஆட்களின் கூட்டம் அதிகம் வந்திருக்கிறது. 
என்னவென்று விசாரித்தால் ரிஷிகபூர் நடித்து ‘காஷ்மீர் கலி’ என்ற இந்திப்  படம் மறுபடியும்  வந்திருப்பதாக நினைத்து ‘காஷ்மீர்  காதலி’ படம் போட்ட  தியேட்டரில் அவ்வளவு  கூட்டம் .வந்தபிறகுதான் விஷயம்  தெரிந்திருக்கு. முக்கால்  வாசி  ஆட்கள் படம் பார்க்காமல் திரும்பி போய் விட்டார்கள். வந்ததுதான் வந்திட்டோம் பார்த்திட்டு போகலாம் என்று ஒரு குரூப் தியேட்டருக்குள் போயிருக்கு என்பதும் அதனால் ஏற்பட்ட குழப்பமும் தனிக்கதை! 

kashmir-ki-kali
காஷ்மீர் கலி படம் 

நாம் பாடலுக்குள் போவோம்  பாடலில் ஒலிக்கும் இசைக்கருவிகளின் தாள பிரயோகம் எல்லாமே அப்படியே புது ஸ்டைலில் இருக்கும். பின்னாளில் தான் தனியாக வந்தவுடன் தன் படத்தில் இதெ ட்யூனை வேறு மாதிரி பயன்படுத்தியிருப்பார் ராஜா. 
சிவாஜி நடித்த  ரிஷிமூலம்’ படத்தில் அந்தப் பாடல் இடம் பெற்றிருந்தது.

rishimoolam

கதைப்படி நீண்ட நாட்கள் தான் பார்த்து பழகிய ஒரு நபர் தனது மகன் என்ற தகவல் தாய்க்கு தெரிய வருகிறது. இந்த மகிழ்ச்சியை அவர் வேறு யாரிடமும் சொல்லமுடியாமல் தவிக்கிறாள். அந்த நொடியில் அவளது மனம் உணரும் நிலையே பாடலாக விரிகிறது. 
“மழை வருவது மயிலுக்கு தெரியும்
மகன் திருமுகம் மனதுக்கு தெரியும்
இனி அவளது உலகத்தில் பகலென்ன இரவென்ன 
மகனே கதிரவனாம் வரும் இரவினில் அவனே புது நிலவாம்.. ”
வரிகள் வருவதற்கு முன்னால் கிடார் தொடங்கி வைக்கும் நடையில் தொடர்ந்து முழங்கும் மிருதங்க இசை... ஒரு மந்தகாச சூழலை நம் மனதில் ஏற்படுத்தி,  அடுத்து சில நிமிடங்களில் மிதமான மழை வந்து விடுமோ என்கிற சிலிர்ப்பை ஏற்படுத்தும்.  
இது அந்த ராகத்தை கையாளும் இசைஞானியின் லயிப்பு. பல்லவி முடிந்ததும் வரும் இடையிசையில்  வீணையிலும், கிடார் இசைக்கருவியிலும் உருமியின் சப்தம்போல் எழுப்பி அசத்தியிருப்பார் இளையராஜா.

ilayaraja
குருவின் வழியை பின்பற்றிய இசைக்கீதம் 

இந்த பாடலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ரிதம்தான் ‘ காஷ்மீர் காதலி’ படத்தில் வரும் பாடலிலும் ஒலிக்கும்! இளையராஜா  இந்த ரிதத்தில் ஏற்பட்ட ஒரு ஈர்ப்பு காரணமாக  தான் தனியாக வந்த பிறகு அதே டியூனை  பயன்படுத்தி மெருக்கேற்றி ஒலிக்க விட்டிருக்கிறார் என்பதை யார் மனமும் நம்பும்.
கவிஞர் கண்ணதாசன் தன்னுடைய கவி ஆளுமையை இந்த பாடலில் நிரூபித்திருப்பார். கதாபாத்திரத்தின் தன்மையை விளக்கி ட்யூனுக்குள் இரட்டைக்கிழவி சொற்கொண்டு கற்கண்டு கவிதையை தூவியிருப்பார்.

 

அவள் கலகலகலவென இருந்தவள்தான்
மிக படபடபடவென பொரிந்தவள்தான்
அவள் சரியென நினைத்து தவறென்று முடிந்தது கழகத்திலே
அவள் மிக மிக பழையவள் உலகத்திலே
இன்று மிக மிக புதியவள் குணத்தினிலே
இது கலியுகமா இல்லை புதுயுகமா இவள் இதயத்திலே
என்று சரணத்தில் எழுதியிருப்பார். தத்தகாரம் போகும் வேகத்திற்கு ஈடு கொடுத்து  ட்யூனில் தமிழலங்காரம் செய்து கொண்டு போகும் கவிஞரின் கவிதைக்கு தலை வணங்கத்தோன்றும் 
இரண்டாவது சரணத்தில் வயலினும் குழலிசையும் பாடலை அடுத்த உணர்வுக்கு இட்டுச்செல்லும்  அதுவும் வரிகள் முடிந்த பிறகு ஒலிக்கும் ஜானகியின் குரல்  மழைச்சாரல் முகத்தில் பட்டு  சிலிர்ப்பது போல ஒலிக்கும். இந்த சிலர்ப்பு ஜானகிக்கு மட்டுமல்ல பாடலை கேட்கும் எல்லோருக்கும் வரும்.

மறக்க முடியாத பாடலின் மறுபக்கத்தின் அடுத்த தொகுப்பு வரும் செவ்வாய்க்கிழமை (14.01.2020) ரசிகர்களுக்காக!
2018 TopTamilNews. All rights reserved.