கூகுள் டூடுல் ஸ்பெஷல்: கூகுள் சிறப்பிக்கும் அந்த மனிதர் யார்?

 

கூகுள் டூடுல் ஸ்பெஷல்: கூகுள் சிறப்பிக்கும் அந்த மனிதர் யார்?

கூடைப்பந்தாட்டத்தை கண்டுபிடித்த கனடிய-அமெரிக்க பேராசிரியர் ஜேம்ஸ் நைஸ்மித்தை சிறப்பிக்கும் விதமாக கூகுள் டூடுல் வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவர், உடற்பயிற்சி ஆசிரியர், பயிற்சியாளர் என பன்முக திறமை கொண்டவரான நைஸ்மித் 1891ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி கூடைப்பந்தாட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

ஆட்டத்தின் விதிகளை இதே நாளில் (ஜன.15) அறிவித்தார். அதனை நினைவுப்படுத்தும் விதமாக கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. 1861ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி கனடாவில் பிறந்த நைஸ்மித், மெக்கில் பல்கலைக்கழகத்தில் உடற்பயிற்சி கல்வியில் இளங்கலை பட்டம் பெற்றார்.

கூகுள் டூடுல் ஸ்பெஷல்: கூகுள் சிறப்பிக்கும் அந்த மனிதர் யார்?

அதன்பின், 1890ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள மாசசூசெட்ஸ் மாகாணம் ஸ்பிரிங்ஃபீல்டிலுள்ள சர்வதேச பயிற்சி கல்லூரியில் பணிக்குச் சேர்ந்தார். அங்கு சேர்ந்தபின் தான் கூடைப்பந்தாட்டத்தை அறிமுகப்படுத்தினார். கால்பந்து போன்ற ஆட்டங்கள் பிரபலமடைந்த சமயத்தில், உள் அரங்க (indoor) விளையாட்டுகளுக்கான முக்கியத்துவம் கருதி இதனை தோற்றுவித்தார்.

இந்த விளையாட்டு பிரபலமடைய கொஞ்ச காலம் ஆனாலும் தற்போது 200க்கும் மேற்பட்ட நாடுகளில் விளையாடப்பட்டுவருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக இந்த விளையாட்டின் மீதான ஆர்வம் அதிகரித்ததன் விளைவாக 1936ஆம் ஆண்டு ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் அறிமுகமானது.

ஜேம்ஸ் நைஸ்மித் பந்தை எறிந்து ஒலிம்பிக்கில் அதன் பயணத்தைத் துவக்கிவைத்தார். இதற்கும் மூலகர்த்தா சாட்சாத் நைஸ்மித்தே. கூடைப்பந்தாட்டம் மாணவர்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மேம்படுத்தும் என அவர் நம்பினார்.

கூகுள் டூடுல் ஸ்பெஷல்: கூகுள் சிறப்பிக்கும் அந்த மனிதர் யார்?

மேலும் இளைஞர்களை இந்த விளையாட்டுக்குள் ஈர்க்கும் நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். அவரின் சீரிய முயற்சி வீண் போகாமல் உலகின் தலைசிறந்த விளையாட்டில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

1937ஆம் ஆண்டு நைஸ்மித் மறைந்தார். அவரைப் போற்றும் விதமாக 1959ஆம் ஆண்டில் கூடைப்பந்தில் புகழ்பெற்ற விளங்கியவர்கள் பட்டியலில் (ஹால் ஆப் பேம்) அவருடைய பெயர் இணைக்கப்பட்டது. நைஸ்மித்தின் சிறப்பை கூடைப்பந்து இன்றளவும் தாங்கி நிற்கிறது.