நாகர்கோவிலில் கோவில் பூட்டை உடைத்து 10 சவரன் நகைகள் கொள்ளை!

 

நாகர்கோவிலில் கோவில் பூட்டை உடைத்து 10 சவரன் நகைகள் கொள்ளை!

கன்னியாகுமரி

நாகர்கோவிலில் கோவிலின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் வடலிவிளையில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. கடந்த 12ஆம் தேதி மாலை பூசாரி பூஜைகளை முடித்துவிட்டு கோவில் நடையை அடைத்துவிட்டு சென்றார். தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை மீண்டும் கோவிலுக்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.

நாகர்கோவிலில் கோவில் பூட்டை உடைத்து 10 சவரன் நகைகள் கொள்ளை!

அப்போது, அம்மன் கழுத்தில் இருந்த 10 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்மநபர்கள் திருடு சென்றது தெரியவந்தது. மேலும், கோவில் லாக்கரை உடைக்க முடியாததால் அதில் இருந்த 15 சவரன் நகைகள் தப்பியதும் தெரியவந்தது. இதனை அடுத்து அவர், கோட்டார் போலீசாருக்கு அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கோவில் நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

அப்போது, அதிகாலை 2 மணியளவில் இருசக்கர வாகனத்தில் 3 மர்மநபர்கள் வரும் காட்சி பதிவாகி இருந்தது. இதன் அடிப்படையில் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே, கொள்ளை நடந்த கோவிலில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மர்மநபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றனர். தற்போது மீண்டும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் வடலிவிளை பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.