காய்கறி வியாபாரி வீட்டில் 92 பவுன் நகை, ரூ.1.15 லட்சம் பணம் கொள்ளை!

 

காய்கறி வியாபாரி வீட்டில் 92 பவுன் நகை, ரூ.1.15 லட்சம் பணம் கொள்ளை!

கன்னியாகுமரி

குமரி அருகே காய்கறி வியாபாரியின் வீட்டின் கதவை உடைத்து 92 பவுன் நகை, ரூ.1.15 லட்சம் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகேயுள்ள மேட்டுகுடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் தாமஸ் பொன்ராஜ். காய்கறி வியாபாரி. இவர் நேற்று காலை வியாபாரத்துக்கு புறப்பட்டு சென்ற நிலையில், அவரது மனைவி வெளியூரில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். விற்பனை முடித்து மதியம் வீட்டிற்கு வந்த தாமஸ் பொன்ராஜ், முன்பக்க கதவை திறந்துகொண்டு உள்ளே சென்றுள்ளார்.

காய்கறி வியாபாரி வீட்டில் 92 பவுன் நகை, ரூ.1.15 லட்சம் பணம் கொள்ளை!

அப்போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், தனது அறைக்குள் சென்று பார்த்தார். அப்போது, அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 92 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தாமஸ் பொன்ராஜ், அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அஞ்சுகிராமம் போலீசார், தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.