நிதி மோசடி வழக்கில் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை: ஞானவேல் ராஜா

 

நிதி மோசடி வழக்கில் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை: ஞானவேல் ராஜா

நிதி மோசடி வழக்கில் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

நிதி நிறுவனம் ஆரம்பிப்பதாக கூறி துளசி மணிகண்டன் என்பவரை 300 கோடி மோசடி செய்ததாக நீதிமனி, மேனகா மற்றும் ஆனந்த் ஆகியோர் மீது இராமநாதபுரம் பஜார் காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த பண மோசடியில் பிரபல சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நிதி மோசடி வழக்கில் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை: ஞானவேல் ராஜா

இந்த நிலையில் தனக்கும் நிதி மோசடிக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று ஞானவேல் ராஜா விளக்கம் அளித்துள்ளார். அத்துடன் நீதிமணி என்பவர் தான் தயாரித்த மகாமுனி என்ற திரைப்படத்தின் தமிழ்நாட்டு உரிமையை வாங்கியதில் தனக்கு மூன்று கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளதாகவும், படம் வெளியாகி பல மாதங்கள் ஆன பிறகும் இன்னும் பணம் தரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஒரு பொருளை வியாபாரம் செய்யும் போது, வாங்குபவர் என்ன செய்கிறார்? அவரின் பின்னணி என்ன? என்பது குறித்து ஆராய்வது இல்லை. சட்டபூர்வமான வியாபாரத்தை மட்டுமே செய்ய முடியும். அதன்படியே மகாமுனி திரைப்படத்தை நீதி மணிக்கு விற்பனை செய்ததாகவும், ஆனால் அவர் மூன்று கோடி ரூபாய் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.

தன்னுடைய பெயரோ, தன்னுடைய நிறுவனத்தின் பெயரோ புகாரில் இல்லாத சமயத்தில் தன்னுடைய பெயரை இணைத்து கூறப்படுவது தவறானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் 300 கோடி ரூபாய் ஏமாற்றி விட்டதாக செய்திகள் வெளியாகிறது. இதில் எள் முனை அளவுகூட உண்மை இல்லை என கூறியுள்ள அவர், தன்னிடம் விளக்கம் பெறாமல் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன எனவும் தெரிவித்திருக்கிறார். இதுபோன்ற செய்திகள் வெளியிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஞானவேல் ராஜா விளக்கமளித்துள்ளார்.