தேமுதிக- பாமக இடையே பிரச்னையா?- ஜி.கே மணி விளக்கம்

 

தேமுதிக- பாமக இடையே பிரச்னையா?- ஜி.கே மணி விளக்கம்

தேமுதிகவுடன் பாமகவிற்கு எந்த கருத்து முரண்பாடுகளும் இல்லை பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

சென்னை தி. நகரில் உள்ள பாமக அலுவலகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விரும்புவோர்களிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்படும் நிகழ்ச்சி இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் 26 ஆம் தேதிவரை மனுக்கள் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பொதுத் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ.10,000, தனித் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ.5,000, அனைத்துத் தொகுதியிலும் போட்டியிட விரும்பும் பெண்கள் ரூ.5,000 செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என கட்சி தலைமை ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனையடுத்து ஏராளமான பாமக நிர்வாகிகள் தங்களின் விருப்பமனுக்களை பெற்று பூர்த்தி செய்து சமர்பித்தனர்.

தேமுதிக- பாமக இடையே பிரச்னையா?- ஜி.கே மணி விளக்கம்

முன்னதாக செய்தியாளர்களிடம் பாமக தலைவர் ஜி.கே மணி, “தமிழகத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளுக்கும் இன்று விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் பாமகவினர் விருப்ப மனுக்களை அளிக்கலாம். கூட்டணி குறித்தும், இட ஒதுக்கீடு குறித்தும் முடிவெடுக்க மருத்துவர் ராமதாஸுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர் கூட்டணி குறித்த முடிவை விரைவில் அறிவிப்பார். தேர்தலில் அன்புமணி ராமதாஸ் போட்டியிட வேண்டும் என கட்சி நிர்வாகிகள் விரும்புகின்றனர். தேமுதிகவுடன் பாமகவிற்கு எந்த கருத்து முரண்பாடுகளும் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலின்போது பாமக சார்பில் வலியுறுத்தப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது. அரசு செய்த நல்ல திட்டங்களை பாராட்டியும் உள்ளோம், குறைகளை எடுத்துக்கூறியும் உள்ளோம்.” என தெரிவித்தார்.