நுரையீரல், செரிமானக்கோளாறு போக்கும் அன்னாசிப்பூ!

 

நுரையீரல், செரிமானக்கோளாறு போக்கும் அன்னாசிப்பூ!

அன்னாசிப்பூ… அஞ்சறைப்பெட்டிகளில் அணிவகுக்கும். அதனாலேயே இதை அஞ்சறைப் பெட்டியின் அழகோவியம் என்பார்கள். ஆனால், இந்த மூலிகைப்பொருளை அவ்வளவாக சமையலில் பயன்படுத்துவது கிடையாது. பிரியாணி மற்றும் அனைத்துவகை அசைவ உணவுகளில் மட்டுமே இது சேர்த்துக்கொள்ளப்படும். இதன் ருசி லவங்கமும் லவங்கப்பட்டையும் சேர்ந்த சுவையைக் கொடுக்கும். இனிப்பு மற்றும் கார்ப்புச் சுவைகளை நாவில் ஆங்காங்கே படரவிடும் தன்மை படைத்தது.

நுரையீரல், செரிமானக்கோளாறு போக்கும் அன்னாசிப்பூ!

அத்தகைய சிறப்புவாய்ந்த அன்னாசிப்பூ பற்றி சித்த மருத்துவர் வி.விக்ரம்குமாரிடம் கேட்டோம். இன்றைய சூழலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு நுரையீரல் பாதிப்பு மற்றும் செரிமானக்கோளாறுகளால் பாதிக்கப்படுவோருக்கு இந்த அன்னாசிப்பூ உதவிகரமாக இருக்கும் என்ற நற்செய்தியுடன் நம்மிடம் பேசினார். இதோ அவர் பேசியதிலிருந்து…

நுரையீரல், செரிமானக்கோளாறு போக்கும் அன்னாசிப்பூ!நுரையீரல் தொடர்பான நோய்களுக்கும், வாதநோய்களுக்கும் சீன மருத்துவத்தில் உணவாகவும் மருந்தாகவும் அன்னாசிப்பூ பயன்படுத்தப்படுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்கி, பல்வேறு காய்ச்சல் வகைகளைத் தடுக்கும் திறன் படைத்த அன்னாசிப்பூவை, காய்ச்சல் பரவிவரும் காலத்தில் உணவில் பயன்படுத்துவது சிறந்தது. `அனித்தோல்’ என்னும் பொருளும் அன்னாசிப்பூவின் மருத்துவ மகத்துவத்துக்குக் காரணமாகிறது.

உறக்கம்:
கல்லீரலுக்குப் பாதிப்பை உண்டாக்கும் ஹெபடைடிஸ் வைரஸ்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் வீரியம் இதில் இருப்பதாக ஆய்வில் உறுதியாகியுள்ளது. பசியைத் தூண்டக்கூடிய, வாய்வை அகற்றக்கூடிய உணவுப் பொருளாக நெடுங்காலமாக உணவுகளில் அன்னாசிப்பூ சேர்க்கப்படுகிறது. தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவும் கருப்பைக் கோளாறுகளை நிவர்த்தி செய்யவும் இதை மருந்தாகப் பயன்படுத்தலாம். செரிமானப் பிரச்னைகளைச் சரிசெய்வதோடு, இதிலுள்ள மருத்துவக் கூறு, ஆழ்ந்த உறக்கத்தை வரவழைக்கும்.

நுரையீரல், செரிமானக்கோளாறு போக்கும் அன்னாசிப்பூ!

இணை உணவு:
கிரீன் டீ அல்லது கொதிக்கும் நீரில் சில நிமிடங்கள் அன்னாசிப்பூவைப் போட்டு, வடிகட்டிப் பருகினால் அதன் மருத்துவக் குணங்களைப் பெறலாம். தூதுவளை இலைகளைத் துவையலாகச் செய்யும்போது, சிறிதளவு அன்னாசிப்பூப்பொடி சேர்த்தால், சோர்ந்திருக்கும் மூச்சுக்குழாய் உற்சாகமடையும். பொடியாக நறுக்கிய நாட்டுத் தக்காளித் துண்டுகள், வதக்கிய சின்ன வெங்காயம், மிளகுத்தூள், பொடித்த அன்னாசிப்பூ போன்றவற்றை நெய்யில் வதக்கி இணை உணவாகச் சாப்பிடலாம். கப நோய்களை எதிர்த்து நிற்கும் வன்மையை இந்த உணவு உடலுக்கு அளிக்கும்.

ஊறல் பானம்:
அன்னாசிப்பூ, சீரகம், லவங்கப்பட்டை, ஏலரிசி, மிளகு, தனியா சம அளவு எடுத்து ஒன்றிரண்டாக இடிக்கவும். அதில், ஒரு டீஸ்பூன் எடுத்து, துணியில் முடிந்து வைத்துக்கொள்ளவும். கொதிக்க வைத்த ஒரு டம்ளர் நீரில் அந்தத் துணி முடிப்பைப் போட்டு ஊற வைத்து, பத்து நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். பிறகு தேவையான அளவு தேன் சேர்த்துப் பருகினால், ஊறல் பானத்தின் மணம் நாசியில் மகிழ்ச்சியைக் கொடுக்கும். மழை மற்றும் குளிர்காலங்களில் தொற்றுக் கிருமிகளைத் தடுக்கும் கேடயம் இது.

அன்னாசிப்பூ – பேரிக்காய் சாறு:
ஒரு கப் திராட்சைச் சாற்றுடன் முக்கால் கப் நாட்டுச் சர்க்கரை, அரை கப் தண்ணீர், நான்கு அன்னாசிப்பூ, இரண்டு சிட்டிகை லவங்கப்பட்டை சேர்த்து ஒரு கடாயில் போட்டு மூடி, (மெல்லிய தீயில் எரித்து) பத்து நிமிடங்கள் காத்திருக்கவும். பிறகு தோல் சீவிய இரண்டு பேரிக்காய்களைக் கடாயில் போட்டு மெல்லிய சிவப்பு நிறமாகும்வரை வதக்கவும். சிவந்த பேரிக்காய் மற்றும் சிவப்பான சாறும் சேர்த்து, சுவை ஊறிய ஊட்டச்சத்து பானத்தைக் கொடுக்கும். இந்தச் சாற்றை, பழத்துண்டுகளின் மீதும், பிரெட்களின் மீதும் குழையவிட்டுச் சாப்பிடலாம்.

 

நுரையீரல், செரிமானக்கோளாறு போக்கும் அன்னாசிப்பூ!
மணக்கும் முட்டை:
முட்டையைத் தண்ணீரிலிட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்துவிட்டு, அதன் ஓட்டை லேசாக உடைக்கவும். பிறகு அந்த முட்டையை அன்னாசிப்பூ, சீன மசாலா, சோயா சாஸ் ஊறிய நீரில் முழுமையாக வேகும்வரை கொதிக்கவிட்டு எடுத்தால் மணக்கும் முட்டை ரெடி.

புளிப்பு – இனிப்பு பானம்:
பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, சிறிது பனை வெல்லத்தைக் கரைத்து நன்றாகக் கொதிக்கவிடவும். அதில் தலா மூன்று அன்னாசிப்பூ, லவங்கப்பட்டையைப் போட்டு, சிறுதீயில் பத்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி, அன்னாசிப்பூ மற்றும் லவங்கப்பட்டையை நீக்கிவிடவும். அதில் ஒரு கப் புளிக் கரைசல், இரண்டு கப் தண்ணீர், மூன்று கப் அன்னாசிப் பழச்சாறு, சிறிது வெண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கவும். புளிப்பும் இனிப்பும் கலந்த சுவை, ஒருமுறை சுவைத்தால் பலமுறை சுவைக்கத் தூண்டும்.