kaappan-mobile kaappan-large
  • September
    23
    Monday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


தீப்பெட்டி கண்டுபிடிக்கப்படாத காலம் அது.அடுப்பு பற்றவைக்க நெருப்பு வாங்க முடியாது. பொது கிணற்றில் நீர் எடுக்க முடியாது. யாரும் பெண் கொடுக்க மாட்டார்கள்!காவிரி 736; அத்தியாயம் -9

gateway
gateway
Loading...

குடகில் தொடங்கி பூம்புகார் வரை நீண்டு கிடக்கிறது காவிரியின் கதை. எல்லா வகை மனிதர்களும் உலவிய காவிரி இன்று கிட்டத்தட்ட கைவிடப்பட்டுவிட்டது. இதற்கான காரணங்களோடு காவிரிக்கரை மனிதர்களின் கதைகளையும் சுமார் 736 கி.மீ தூரம் பயணித்து தேடி கோர்க்கிறது காவிரி எனும் இந்த சரடு. கைவிடப்பட்ட காவிரியின் வரலாறை ஆவணப்படுத்தும் முயற்சியாக டாப் தமிழ் நியூஸ் செய்தி நிறுவனம் "காவிரியின் இரண்டாயிரமாண்டு சரித்திரம்" என்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படமானது பல்வேறு அத்தியாயங்களாக வெளியாகி வருகிறது.

அத்தியாயம் -  9 

கேட் வே ஆஃப் கிரிஸ்டியானிட்டி

டேனிஷ்காரரர்கள் இந்தியாவிற்கு வரும் முன்பே கிறிஸ்துவம் இந்தியாவிற்கு வந்துவிட்டது. போர்ச்சுக்கீசியர்களால் கத்தோலிக்கும்,டச் வணிகர்களால் புரட்டெஸ்டண்ட்டும் தரங்கம்பாடிக்கு அறிமுகம் செய்யப்பட்டுவிட்டன. ஆனால், ஜெர்மன்  நாட்டைச் சார்ந்த லூத்திரன் சபை, இங்கே தங்கி மிஷன் ஒன்றை துவங்கியபின்தான் தரங்கம்பாடி இந்தியாவின் கேட் வே ஆஃப் கிறிஸ்டியானிட்டி என்கிற பெருமையைப்  பெறுகிறது.

தரங்கம்பாடியில் டேனிஷ்காரர்கள்  நிலைபெற காரணமானவன், நான்காம் பெடரிக் என்கிற டென்மார்க் மன்னன். அவர் தன் கட்டுப்பாட்டில் இருந்த  தரங்கம்பாடிக்கு மறை பணியாளர்களை அனுப்ப விரும்பினார். அரசன் விருப்பத்தை அறிந்த லூத்ரன் டென்மார்க் கிறிஸ்துவ சபையின் பீஷ்மன் ஃபோர்மான் அதற்கான முயற்சியில் இறங்கினார். ஆனால் டென்மார்க் மறை பணியர்கள் யாரும் இந்தியாவிற்கு போக ஆர்வம் காட்டவில்லை.

அது மட்டுமல்ல அன்றைய டென்மார்க் மறைப்பணியாளர்கள். ஆடம்பர பிரியர்களாகவும் குடிகாரர்களாகவும் இருந்ததாக பிஷப் அஞ்சினார் என்று E. ஆர்னோ லெக்மேன் என்கிற கிறிஸ்துவ சரித்திர ஆசிரியர் எழுதுகிறார்.  அதனால் டென்மார்க் பேராயர் ஜெர்மன் நாட்டை சேர்ந்த தனது நண்பர்களின் உதவியை நாடுகிறார். அவர்கள்தான், ஹென்றி புலூட்சத்-பார்த்த லோமியன் சீகன்பால்கூ என்கிற இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புகிறார்கள். அவர்கள் இருவரும் பிறப்பால் ஜெர்மானியர்கள். ஹாலே பல்கலைக்கழத்தில் படித்தவர்கள்.

இருவரும் ஹாலே நகரில் இருந்து புறப்பட்டு ஹோபன் கேகன்  நகரை அடைகிறார்கள். அங்கே, அரசரின் ஆணையைப் பெற்றுக்கொண்டு 1705-ஆம் ஆண்டு நவம்பர் 30 அன்று இந்தியாவிற்கு கப்பல் ஏறுகிறார்கள். அந்த கப்பல் 1706- ஆம்  ஆண்டு ஜுலை 9-ஆம் தேதி தரங்கம்பாடிக்கு வந்து சேர்கிறது. கிட்டத்தட்ட 221 நாள் பயணம். தரங்கம்பாடி துறைமுகம் அப்போது பெரிய கப்பல்கள் வந்து நிற்கும்  அளவிற்கு  ஆழமில்லாததால், நான்கு மைல் தொலைவில் கப்பலை நிறுத்திவிட்டு படகில் ஏறி துடுப்பு போட்டுத்தான் கரைக்கு வருவது வழக்கம்.

சீகன்பால்கூவும், புலூட்சத்தும் படகில் ஏறுகிறார்கள். படகோட்டிகளை விரைவாகத் துடுப்பு போடும்படி டச் வணிகர்களின் அதிகாரிகள் சவுக்கால் அடித்து விரட்டுவதைப் பார்த்து அதிர்ச்சியாகிறார்கள் . காரணம் கேட்டதற்கு 'உள்ளூர்வாசிகள்தானே என்று அலட்சியமாகப் பதில் சொல்கிறான் அந்த அதிகாரி. கரைக்கு வந்த பிறகும் அவர்கள் இருவரையும் கண்டுகொள்ள ஆளில்லை. அரசரின் ஆணைக் கடிதத்துடன் இருவரும் தரங்கம்பாடி கவர்னரை போய் பார்க்கிறார்கள்.

கவர்னரோ, அங்கே இருக்கும் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களாகப் பணியாற்றுங்கள் என்கிறார். சீகன்பால்கூவும் அவரது தோழரும் அதை மறுத்துவிடுகிறார்கள். தங்கள் ஜெர்மன் லூத்ரன் சபை சொன்னபடி மறைப்பணி தவிர வேறு பணியாற்ற முடியாது என்று தெரிவிக்கிறார்கள். அன்றைய தரங்கம்பாடியில் இருந்த கிறிஸ்தவர் அனைவரும் ஐரோப்பியர்கள். உள்ளூர் மக்களில் யாரும் கிறிஸ்துவர்கள் இல்லை. அவர்கள்  யாரும் கிறிஸ்துவ மத கட்டளைப்படி நடந்துகொள்பவர்களாகவும் இல்லை. உள்ளூர் மக்களை மதம் மாற்றுவதற்கு தடைகளே இவர்கள்தான் என்று சீகன்பால்கூ குறிப்பிடுகிறார்.
 
மதம் மாறிய தமிழர் ஒருவர், அங்கு வாழ்ந்த ஐரோப்பியர் பற்றி எழுதிய மலபார் கடிதப் போக்குவரத்து 34 என்கிற குறிப்பில் இங்குள்ள ஐரோப்பியர் வேத ஆகமத்தில் சொல்லப்பட்டுள்ள பத்துக் கட்டளைப்படி நடப்பது இல்லை. அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு மதுமயக்கத்தில் ஒருவரோடு ஒருவர் சண்டை போடுவதும் ... பரத்தமை..சூதாட்டம் என்று கேளிக்கைகளில் அதிகம் கவனம் செலுத்துபவர்களாகவும், பணக்காரர்களாக இருப்பவர்கள் அற செயலுக்கோ, பொது நன்மைக்கோ செலவிட மாட்டார்கள். உள்ளூர் ஏழைமக்கள் குறித்து ஒருபோதும் கவலைப்படமாட்டார்கள் என்று சொல்கிறது அவரது கடிதம்.

ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் புற சமயத்தினரை நாய்களைப்போல் நடத்தி புண்படுத்தியதாகவும் சீகன்பால்கூ எழுதுகிறார். இதனால்  சீகன்பால்கூவும், புலூட்சத்தும் ஆரம்பகாலத்தில் அங்கு இருந்த அடிமைகளை மையமாகக் கொன்டே பணியாற்றினார்கள். 

மதமாற்றத்திற்கு சாதி பெரும் தடையாக இருந்துருகிறது. கிறிஸ்தவ  மதத்திற்கு மாறியவர்கள் இந்த சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களாகவே நடத்தபட்டு சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டனர். தீப்பெட்டி கண்டுபிடிக்கப்படாத காலம் அது.அடுப்பு பற்றவைக்க நெருப்பு வாங்க முடியாது. பொது கிணற்றில் நீர் எடுக்க முடியாது. யாரும் பெண் கொடுக்க மாட்டார்கள். கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர்களை இறந்து போனவர்களாகக் கருதி.. அவர்களது குடும்பத்தினரே இறுதிச்சடங்கு செய்வதும் அப்போது வழக்கில் இருந்திருக்கிறது.. இந்த சூழலில்... தஞ்சைப் பகுதியில் நிலவிய அடிமை முறை அவர்களுக்கு உதவியாக இருந்திருக்கிறது.

1715-ஆம் ஆண்டு அடிமைகள் சிலரை விலைக்கு வாங்கி, அவர்களை கொண்டு கிறிஸ்துவ சபை ஒன்று நிறுவப்பட்டது.  விலைக்கு வாங்கப்பட்டவர்கள் ஹாசு கிறிஸ்துவர்கள் என்று அழைக்கப்பட்டிக்கிறார்கள். பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும்  பெற்றோர்களால் விற்கப்பட்ட பிள்ளைகளை சீகன்பால்கூ விலை கொடுத்து வாங்கியிருக்கிறார். 1785-ல் எழுதப்பட்ட மராத்திமோடி ஆவணம் ஒன்றின்படி... திருமுல்லைவாசல் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்த செவத்தாயி என்பவள், தன் சகோதரி மகளை, தரங்கம்பாடி வெள்ளைக்காரன்  உஸ்மானுக்கு, ஆறு சவரன் ஒரு பணத்திற்கு விற்றதாகவும், விலைக்கு வாங்கப்பட்ட அந்த சிறுமிக்கு திருமுழுக்கு  செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் மக்களை கிறிஸ்துவர்களாக்கவும்,கிறிஸ்துவர்களை நிலைக்கக் செய்யவும் உள்ளூர் மக்களில் இருந்து சிலரைத் தேர்ந்தெடுத்து.. உபதேசி ஆக்குகிறார்கள். முதல் தமிழ் உபதேசியார் நியமிக்கப்பட்ட நாள் மே 28 1707,  தரங்கம்பாடி மறைத்தளத்தில் இருந்து குறுக்சன் அனைவரும் ஐரோப்பியர்களே . முதன்முதலில் 1718.ஆம்  ஆண்டு கடலூர்ச் சேர்ந்த சொக்கநாதபிள்ளை மகன் ஆறுமுகம் என்ற ஆரோன் பாஸ்டராக நியமிக்கப்பட்டார். இதனை உலகின் முதல் கறுப்பின பாஸ்டர் நியமிக்கப்பட்டார் என்று ஜெர்மன் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.

1707 டிசம்பர் 28.ஆம் தேதி தரங்கம்பாடியில் முதல் பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டது. மாணவர்களுக்கு  உணவு ,உடை , எழுதுபொருட்கள், தங்குமிடம் இலவசமாக வழங்கப்பட்டது . காலை 6மணி முதல் 11 மணி வரை மதக்கல்வி. மதக்கல்வி இடையில் 8 மணிக்கு உண்பதற்கு பனியாரம் தருவார்கள். 11 மணியிலிருந்து  12 மணி வரை உணவுநேரம் 12 மணி முதல் 1 வரை ஓய்வு. 3 மணியிலிருந்து 4 மணி வரை கணிதம்.. மீண்டும் மறைக்கல்வி .. அதன்பிறகு உடற்பயற்சி . இரவில் வானியல் கற்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து .9 மணிக்கு உறங்கிவிட வேண்டும். 

இது தவிர, தமிழ் மருத்துவம், மூலிகை மருத்துவம் கற்பிக்கப்பட்டது. சீகன்பால்கூ  பைபிள் மட்டுமல்லாமல், சைவ, வைணவ,  மதங்கள் குறித்து புத்தகங்கள் தொடங்கி பல்வேறு சிறு நூல்கள் கையேடுகள் என பல நூல்களை எழுதியிருக்கிறார். ஐரோப்பாவுக்கு மிகவும் மாறுபட்ட தட்பவெப்ப சூழல் , புதிய உணவு வகைகள் எல்லாம் சீகன்பால்கூவின் உடலை வாட்டின. தனது வாழ்நாளில்   கடைசி 13 ஆண்டுகள் அவர் , தமிழ் மொழியை ஜெர்மானியர்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளூர் மாணவர்களின் கல்விக்கான உதவியைப் பெற்றுத்தருவதற்காகவே செலவிட்டார். அவர் எடுத்த முயற்சி இன்றுவரை தொடர்கிறது.

1719-ஆம் ஆண்டு பிப்ரவரி 23-ஆம் தேதி உடல் நலிவுற்று இறந்துபோனார் சீகன்பால்கூ. அவரது உடல், அவர் உருவாக்கிய புதிய ஜெருசேலம் தேவாலயத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. இதுதான் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் புரட்டஸ்டெண்ட் தேவாலயம். இந்த தேவாலயத்திற்கு 1717-ஆம் ஆண்டு பிப்ரவரி 9-ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. நாகப்பட்டினத்தில் இருந்த டச் நிர்வாகம் மரத்தூண்கள், கண்ணாடி, ஈயம் போன்றவற்றை அன்பளிப்பாக வழங்கியது. கடற்கரையிலிருந்து சிப்பியை சேகரித்து சுட்டு சுண்ணாம்பு செய்து 50-உதவியாளர்கள் 16-கொத்தனார்கள், 8-தச்சர்கள், 6-கொல்லர்கள் சேர்ந்து இந்த தேவாலயத்தைக் கட்டியெழுப்பினார்கள்.

செப்டம்பர்-9 ஆம் தேதி மழைக்காலம் தொடங்கியது.. கூரை அமைப்பதை தவிர அனைத்து பணிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. 1718-ல் ஜூலையில் மீண்டும் பணி தொடங்கியது யாழ்ப்பாணத்திலிருந்து மே மாதமே பனைமர உத்திரங்களும், மரச்சட்டங்களும் வந்து சேர்ந்தன. ஒரு வேய்ந்த கூரையுடன் புதிய ஜெருசேலம் ஆலயம் முழுமை பெற்றது. கூரையின் உச்சியில் பொருத்தப்பட்ட சிலுவையில் நான்காம் பெடரிக் பெயரில் உள்ள முதல் எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. இந்த  தேவாலயம் சிலுவை வடிவில் கட்டப்பட்டுள்ளது. 90 அடி நீளம் முப்பது அடி அகலமும் கொண்ட இந்த தேவாலயம் 1718 அக்டோபர் 17-ம் தேதி திருநிலைப்படுத்தப்பட்டது. தற்போது முன்னூறு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டதால் அதற்கான விழா ஏற்பாடும் மும்முரமாக நடந்துகொண்டு இருக்கிறது.

தொடரும்

தரங்கம்பாடி அழகியின் காலடியில் வீழ்ந்த சோகம்

2018 TopTamilNews. All rights reserved.