`ரூ.350 போர்வைக்கு ரூ.12.80 லட்சம் கார் பரிசா விழுந்திருக்கு!’- ஏமாற்றிய மோசடி கும்பல்… விழிப்பாக செயல்பட்ட பஞ்சர் கடைக்காரர்

 

`ரூ.350 போர்வைக்கு ரூ.12.80 லட்சம் கார் பரிசா விழுந்திருக்கு!’- ஏமாற்றிய மோசடி கும்பல்… விழிப்பாக செயல்பட்ட பஞ்சர் கடைக்காரர்

நீங்கள் வாங்கிய 350 ரூபாய் மதிப்புள்ள போர்வைக்கு ரூ.12.80 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக விழுந்திருப்பதாக கூறி சென்னை பஞ்சர் கடைக்காரரை மோசடி கும்பல் ஒன்று ஏமாற்ற முயன்றுள்ளது. விழிப்பாக செயல்பட்ட பஞ்சர் கடைக்காரர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் சுரேஷ். இவர் ஓஎம்ஆர் சாலையில் பஞ்சர் ஒட்டும் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த மாதம் 28ம் தேதி ஸ்நாப் டீல் என்ற ஆன்லைன் வணிக தளத்தில் 350 ரூபாய்க்கு போர்வை ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து, 20 நாட்களுக்கு பிறகு சுரேஷ் செல்போனுக்கு எஸ்எம்எஸ் ஒன்று வந்துள்ளது. இதன் பின்னர் பேசிய ஒருவர், ஷாப்குளுஸ் டாட் காம் என்ற நிறுவனத்தின் உதவி மேனேஜர் சுஜித் பேசுகிறேன் என்று கூறியுள்ளார். அப்போது, நீங்கள் வாங்கிய போர்வைக்கு ரூ.12.80 லட்சம் மதிப்புள் மகேந்திர எக்ஸ்யூவி கார் பம்பர் பரிசாக விழுந்துள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும், நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக பரிசு அளிக்க உள்ள கார், தனது அடையாள அட்டை மற்றும் தனது போட்டோவை வாட்ஸ் அப்பில் அனுப்பியதோடு, உங்களுக்கு பரிசாக கிடைக்க உள்ள காரின் விலையில் இருந்து ஒரு சதவிகிதம் அதாவது 12,800 ரூபாய் வரியாக செலுத்த வேண்டும் என்றும் அந்த பணத்தை எங்கள் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும், வங்கிக் கணக்கு விவரத்தை வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார். கார் ஆசைக்கு ஏமாறாத சுரேஷ், உடனடியாக செம்மஞ்சேரி காவல் நிலையத்துக்கு சென்றார். அப்போது, தனக்கு வந்த வாட்ஸ் அப் மேசேஜ் உள்ளிட்டவற்றை காவல்துறையினரிடம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, அந்த செல்போன் நம்பரில் காவல்துறையினர் சுஜித்திடம் பேசியுள்ளனர். அப்போது, காவல்துறையினர் பேசுவதை தெரிந்து கொண்ட சுஜித் உடனடியாக செல்போன் அழைப்பை துண்டித்தோடு, சுவிட்ச் ஆப் செய்துவிட்டார். அப்போதுதான் சுஜித் மோசடி கும்பல் என்று சுரேஷூக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, விழிப்பாக செயல்பட்ட சுரேஷை காவல்துறையினர் பாராட்டியதோடு, இந்த மோசடி கும்பல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.