புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ஏழுமலை கொரோனாவால் உயிரிழப்பு

 

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ஏழுமலை கொரோனாவால் உயிரிழப்பு

கொரோனா தொற்றினால் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஏழுமலை(வயது54) இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

புதுச்சேரியின் ஊசுடு தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக மூன்று முறை தேர்வு செய்யப்பட்ட ஏழுமலை, காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக  பதவி வகித்துள்ளார்.  போக்குவரத்து,  உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

கடந்த  சில நாட்களுக்கு முன்பு இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், புதுச்சேரியில் உள்ள  ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  இன்று மதியம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

புதுச்சேரியில் கொரோனாவால்   முன்னாள் எம்எ.ல்.ஏ பாலன் உயிரிழந்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் ஒருவரும்  கொரோனாவுக்கு பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பொதுவாகவே புதுச்சேரியில் இதுவரை இல்லாத அளவாக இன்று மேலும்  481 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,381 ஆக உயர்ந்திருக்கிறது.

இந்திய அளவிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடியே இருக்கிறது.  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 60,963 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 22,68,675-ல் இருந்து 23,29,638 ஆக உயர்ந்துள்ளது.  அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 56,110 குணமடைந்துள்ளதால் இதுவரை 16,39,599 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் தெரியவருகிறது.

புதுச்சேரி்யின் சமூக நலத்துறைஅமைச்சர் கந்தசாமி, அவரது  தாயார் ராஜம்மாள்,   மற்றும் அமைச்சர் கந்தசாமி மகன் விக்னேஷ் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும்,  புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவரும் ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அதிகாரத்தில் இருப்பவர்களையே கொரோனா இப்படி ஆட்டிப்படைத்து வரும் நிலையில் சாமானியர்கள் பெரிதும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.