எப்போதும் ஆரோக்கியமாக இருக்க தவிர்க்க, குறைக்க வேண்டிய உணவுகள்!

 

எப்போதும் ஆரோக்கியமாக இருக்க தவிர்க்க, குறைக்க வேண்டிய உணவுகள்!

சரியான உணவைத் தேர்வு செய்வது நம்மை ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் வைத்துக்கொள்ளும். உடலின் வெளிப்புறத்தில் மாற்றம், பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக கவனித்துவிடுகிறோம். உள் உறுப்புக்களில் ஏற்படும் பாதிப்பு, மாற்றத்தை நம்மால் அறிய முடிவது இல்லை. அவற்றை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது நம்முடைய கடமை. உள் உறுப்புக்களின் ஆரோக்கியம் நாம் எடுத்துக்கொள்ளும் உணவு அடிப்படையிலேயே உள்ளது. அவற்றை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளத் தவிர்க்க வேண்டிய, குறைத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் சிலவற்றைப் பற்றிப் பார்ப்போம்…

எப்போதும் ஆரோக்கியமாக இருக்க தவிர்க்க, குறைக்க வேண்டிய உணவுகள்!

பதப்படுத்தப்பட்ட உணவுகள்:

ஊறுகாய், கருவாடு தொடங்கி பதப்படுத்தப்பட்ட எல்லா உணவுகளுமே உடல் நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகத்தான் உள்ளது. அது உணவு செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை பாதிப்படைய செய்கிறது. எனவே, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்துவிட்டு ஃபிரஷ்ஷாக இப்போது தயாரிக்கப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.

சர்க்கரை:

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை உடல் நலத்துக்கு கேடானது, தீங்கு விளைவிக்கக் கூடியது. சர்க்கரை உடனடியாக ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்கிறது. அது செரிமான மண்டலத்தில் வாழும் நல்ல பாக்டீரியா காலணியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சர்க்கரையைத் தவிர்க்க முடியாவிட்டாலும் குறைத்துக்கொள்வது நல்லது.

முட்டை:

முட்டை ஒரு ஆரோக்கியமான உணவுதான். இருப்பினும் பெரியவர்களுக்கு அது கெட்ட கொழுப்பு அளவை அதிகரிக்க செய்கிறது. அதன் காரணமாக இதய ரத்த நாள அடைப்பு பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. முட்டையில் உள்ள புரதச்சத்து வயிற்றில் வாழும் நல்ல பாக்டீரியாவைத் தூண்டி ரத்தம் உறைதலை விரைவுபடுத்தும் ரசாயனத்தைச் சுரக்கச் செய்துவிடுகிறது. இதன் காரணமாக இதய நோய்கள், பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. எனவே, வயதானவர்கள் ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேல் முட்டையை எடுத்துக்கொள்ள வேண்டாம்.

இறைச்சி:

ரெட் மீட் எனப்படும் மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி போன்றவை இதய நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன. மேலும் பெருங்குடல் புற்றுநோய்க்கான வாய்ப்பையும் அதிகரிக்கச் செய்கின்றன. மேலும் இது வயிற்றில் வாழும் சில வகையான பாக்டீரியாவைத் தூண்டி உடல் எடை அதிகரிப்பு முதல் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு வரை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. எனவே, அடிக்கடி இத்தகைய இறைச்சிகளை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

செயற்கை இனிப்பூட்டிகள் (artificial sweeteners) :

சர்க்கரைக்கு மாற்றாக இனிப்புச் சுவை கொண்ட செயற்கை சர்க்கரைகளைச் சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்துகின்றனர். இது ஆரோக்கியமானது என்று பலரும் கருதுகின்றனர். செயற்கை இனிப்பு சுவையூட்டிகள் ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் நல்லது இல்லை என்று கூறப்படுகிறது. செயற்கை இனிப்பு சுவையூட்டிகள் நல்ல பாக்டீரியா செயல்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இது குளுக்கோஸ் டாலன்ஸ் செயல்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தி சர்க்கரை நோய் போன்ற வளர்சிதை மாற்ற நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்கிறது.