வழுக்கையைத் தடுக்கும் உணவுகள்!

 

வழுக்கையைத் தடுக்கும் உணவுகள்!

தலை முழுக்க அடர்த்தியாக முடி இருந்தால்தான் அழகு என்று பலரும் கருதுகிறோம். முடி இல்லை என்றாலும் வழுக்கையும் ஒரு அழகுதான். ஒரு நாளைக்கு 20 – 30 என்று முடி உதிர்வது இயற்கையானதுதான். அதற்கு ஏற்ற வகையில் முடி முளைக்கவும் செய்யும். சிலருக்கு அதிக அளவில் முடி உதிரும் பிரச்னை இருக்கும். இதற்காக காஸ்ட்லி சிகிச்சைகள் எல்லாம் பெறுவார்கள். ஆனாலும் முடி உதிர்தல் பிரச்னை போகாது. முழுதும் வழுக்கையான நிலையில் முடி வளர்வது என்பதற்கு சாத்தியமில்லை. ஹேர் டிரான்ஸ்பிளாண்ட் செய்தாலும் தலை முழுக்க செய்வது என்பது மிகவும் செலவு மிக்கதாக இருக்கும்.

வழுக்கையைத் தடுக்கும் உணவுகள்!

முடி உதிர்தல் பிரச்னை உள்ளவர்கள் கருவேப்பிலை போன்று சில உணவுகளை எடுத்து வந்தால் ஓரளவுக்கு நிவாரணம் பெறலாம்.

குறிப்பாக முட்டை மற்றும் பால் பொருட்களில் பயோடின் என்ற வைட்டமின் பி7 நிறைவாக உள்ளது. இந்த பயோடின்தான் முடி வளர்ச்சிக்கான ஆதாரமாக உள்ளது. யாருக்கு எல்லாம் பி7 பற்றாக்குறை உள்ளதோ அவர்களுக்கு முடி உதிர்வு விரைவாக நடக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் முடி வளர்ச்சியுடன் தொடர்புடைய புரதம், பி12, இரும்பு, துத்தநாகம், ஒமேகா 6 கொழுப்பு அமிலம் ஆகியவை பால் பொருட்கள், முட்டையில் உள்ளன. இவற்றை எடுத்துக்கொள்வது முடி வளர்ச்சியைத் தூண்டும்.

ஓட்ஸ் நம் ஊர் உணவு இல்லைதான். சுவையில்லாத அந்த உணவில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. அதிக அளவில் நார்ச்சத்து, துத்தநாகம், ஒமேகா 6 கொழுப்பு அமிலம், பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் ஆகியவை இதில் அதிகம் உள்ளன. இதில் உள்ள வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. இதில் உள்ள பீட்டா குளுக்கன் முடியின் வேர்க்கால்களை வலிமைப்படுத்துகிறது.

பாதாமில் பயோடின் நிறைவாக உள்ளது. இதனுடன் மக்னீசியமும் உள்ளது. இவை இரண்டும் முடி வளர்ச்சியைத் தூண்டுகின்றன. தொடர்ந்து பாதாம் சாப்பிட்டு வருபவர்களுக்கு முடியின் தடிமன் அதிகரிக்கும், முடி வேகமாக ஆரோக்கியமாக வளரும்.

வால்நட்டில் உள்ள ஒமேகா கொழுப்பு அமிலம், பயோட்டின் முடி உதிர்வைத் தடுத்து, முடி வேர்க்கால்களைத் தூண்டி முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.

ஸ்டிராபெர்ரியும் கூட முடி வளர்ச்சிக்கு உதவி புரிகிறது. இதில் சிலிக்கா என்ற தாது உப்பு அதிக அளவில் உள்ளது. முடி வளர்ச்சிக்கு இந்த சிலிக்காகவும் அவசியம். மேலும் ஸ்டிராபெர்ரியில் உள்ள எலாஜிக் அமிலம் முடி ஜீவன் இன்றி வறண்டு போய் தடிமன் குறைந்து உதிருவதற்கான சூழலைத் தடுக்கிறது.