உடனடி எனர்ஜி தரும் இயற்கை உணவுகள்!

 

உடனடி எனர்ஜி தரும் இயற்கை உணவுகள்!

பலருக்கும் காலைப் பொழுது விடிவது உற்சாகமானதாக இருக்கும். நேரம் செல்ல செல்ல ஆற்றல் எல்லாம் இழந்தவர்கள் போல ஆகிவிடுவார்கள். இதனால் அவர்களின் செயல்திறன் பாதிக்கப்படும். அப்படி பட்டவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உடலுக்கு உடனடியாக ஆற்றல் தரும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் பற்றி பார்ப்போம்!

வாழைப் பழம் உடலுக்கு உடனடியாக ஆற்றலைத் தரும். இதில் காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட், பொட்டாசியம், வைட்டமின் பி6 உள்ளிட்ட சத்துக்கள் நிறைவாக உள்ளன. இவை உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கும்.

உடனடி எனர்ஜி தரும் இயற்கை உணவுகள்!

காபி குடிப்பது உடலுக்கு சற்று கெடுதல் என்று சொல்லப்பட்டாலும் ஒன்று, இரண்டு கப் எடுப்பதில் தவறு இல்லை. இன்ஸ்டன்ட் எனர்ஜி வேண்டும் என்றால் காபி குடித்தால் போதும். காபியில் உள்ள காஃபின் என்ற ரசாயனம் ரத்தத்தில் கலந்து மூளையை அடைந்து நியூரோடிரான்ஸ்மிட்டர்களை தூண்டுகிறது. இதன் காரணமாக என்டார்ஃபின் என்ற ரசாயனம் சுரந்து மூளைக்கு விழிப்புணர்வை அளிக்கிறது.

முட்டை அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த திருப்திகரமான உணவு மட்டுமல்ல நாள் முழுவதுக்கும் ஆற்றலைத் தரும் உணவுமாகவும் உள்ளது. இதில் புரதச்சத்து, கொழுப்புச்சத்து நிறைவாக உள்ளது. அதனால் நிலையான நீடித்த ஆற்றல் நமக்குக் கிடைக்கும்.

ஆப்பிள் உலகம் முழுவதும் அனைவராலும் விரும்பப்படும் பழம். இதில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் ஊட்டச்சத்து உடலுக்கு ஆற்றலைத் தரும். ஒரு நடுத்தர சைஸ் ஆப்பிளில் 14 கிராம் கார்போஹைட்ரேட், 10 கிராம் சர்க்கரை உள்ளது. இதில் உள்ள இயற்கை சர்க்கரை மற்றும் நார்ச்சத்து மெதுவான, நிலையான, நீடித்த ஆற்றலைப் பெறச் செய்யும்.

தண்ணீர் கூட புத்துணர்வும் ஆற்றலையும் அளிக்கும். தண்ணீர் நாம் உயிர் வாழ இன்றியமையாதது. உடலில் உள்ள உறுப்புக்கள், செல்கள் அளவில் செயல்பாடு திருப்திகரமாக நடக்கத் தண்ணீர் தேவை. இந்த செயல்பாடுகளில் ஒன்றுதான் உடலுக்குத் தேவையான ஆற்றலைப் பெறுவதும். போதுமான தண்ணீர் அருந்தாதது உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும். அது உடலுக்கு சோர்வைத் தரும். போதுமான அளவு தண்ணீர் அருந்துவது எனர்ஜி லெவல் அதிகரிக்கச் செய்யும்.

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி நிறைவாக உள்ளது. ஒரு ஆரஞ்சு பழத்திலிருந்து ஒரு நாள் தேவையைக் காட்டிலும் அதிக வைட்டமின் சி நமக்கு கிடைத்துவிடுகிறது. இதில் உள்ள கலோரி, ஆன்டி ஆக்சிடெண்ட் உள்ளிட்டவை உடலுக்கு ஆற்றலைத் தருகின்றன.

அவகேடோவை சூப்பர் ஃபுட் என்று சொல்வார்கள். அதில் 84 சதவிகிதம் ஆரோக்கியமான கொழுப்புச் சத்து உள்ளது. இந்த கொழுப்புச் சத்து ரத்தத்துக்கு உகந்த கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்வதுடன் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து உறிஞ்சப்படுவதையும் ஊக்குவிக்கிறது. இவை உடலில் சேகரிக்கப்பட்டுத் தேவைப்படும்போது ஆற்றலாக மாற்றிப் பயன்படுத்தப்படுகிறது.