கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; பாதுகாப்புடன் இருக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

 

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; பாதுகாப்புடன் இருக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

திருவள்ளூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகள் நேற்று விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக, கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கரையோர பகுதி மக்கள் பாதுகாப்புடன் இருக்க மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி அறிவுறுத்தி உள்ளார்.

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; பாதுகாப்புடன் இருக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு 7 மணி முதல் பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருத்தணி ஆகிய பகுதிகளிலும், தமிழக எல்லையில் உள்ள ஆந்திர பகுதிகளிலும் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பள்ளிப்பட்டில் 170 மில்லிமீட்டர் மழை பதிவானது. இதனால், பள்ளிப்பட்டு அருகேயுள்ள மேற்குத்தொடர்ச்சி மலைகளிலிருந்து வெள்ளநீர் லவாகுசா ஆறுகள் வழியாக கொலஸ்தலை ஆற்றில் ஆர்ப்பரித்து பாய்கின்றது. இதனிடையே, கிருஷ்ணாபுரம் அணை வேகமாக நிரம்பி வருவதால், பிற்பகல் முதல் அணையிலிருந்து வினாடிக்கு 900 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது. இதனால் பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரைப்புரண்டு சென்றது.

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; பாதுகாப்புடன் இருக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

இதனால் ஆற்றின் இடையில் உள்ள தரைப்பலங்கள் அனைத்தும் நீரில் முழ்கின. மேலும், கரையோர கிராமங்களிடையே போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து, திருத்தணி, பள்ளிப்பட்டு வட்டங்களில் உள்ள கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து, கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வருவாய் மற்றும் காவல் துறையினர் வெள்ள அபாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.