பட்டாசு ஆலை விபத்து: முதல்வர் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

 

பட்டாசு ஆலை விபத்து: முதல்வர் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சன்குளத்தில் இயங்கி வந்த மாரியம்மாள் பட்டாசு ஆலையில் இன்று பிற்பகல் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் படுகாயம் அடைந்த 20 பேருக்கு சிவகாசி மற்றும் சாத்தூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாட்டு வெடிகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டே இருப்பதால், தீயணைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி ஆலை இயங்கி இருந்தால் 2025 வரை பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து செய்யப்படும் என ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பட்டாசு ஆலை விபத்து: முதல்வர் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பட்டாசு ஆலை விபத்து பகுதியில் மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கவும் ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 3 லட்சமும் படுகாயமடைந்தவர்களுக்கு 1 லட்சமும் வழங்கப்படும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுங்கள். துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார்.