நீட் தேர்வு தோல்வி பயத்தால் வீட்டில் இருந்து வெளியேறிய கோவை மாணவர்… ஜோலார்பேட்டையில் பத்திரமாக மீட்பு!

 

நீட் தேர்வு தோல்வி பயத்தால் வீட்டில் இருந்து வெளியேறிய கோவை மாணவர்… ஜோலார்பேட்டையில் பத்திரமாக மீட்பு!

திருப்பத்தூர்

கோவையில் நீட் தேர்வில் தோல்வி பயத்தால் வீட்டில் இருந்து வெளியேறிய மாணவரை ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மதன். இவரது மகன் விக்னேஷ்(18). பிளஸ் 2 முடித்துள்ள இவர் மருத்துவ படிப்பில் சேருவதற்காக கடந்த 12ஆம் தேதி இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதி உள்ளார். அதில் சரியாக எழுதவில்லை என கூறப்படுகிறது. இதனால், நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என அச்சத்தில் வீட்டில் கடிதம் எழுதிவைத்து விட்டு விக்னேஷ் வெளியேறி உள்ளார்.

நீட் தேர்வு தோல்வி பயத்தால் வீட்டில் இருந்து வெளியேறிய கோவை மாணவர்… ஜோலார்பேட்டையில் பத்திரமாக மீட்பு!

அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், இதுகுறித்து பெரியநாயக்கன் பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து மாணவரை தேடி வந்தனர். இந்த நிலையில், மாணவர் விக்னேஷ் நேற்று நள்ளிரவு, கோவையில் இருந்து சென்னை செல்லும் ஆலப்புழா விரைவு ரயிலில் ஏறியது தெரியவந்தது. இதுகுறித்து, பெரியநாயக்கன் பாளையம் போலீசார், உடனடியாக ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில், ஜோலார்பேட்டை வந்த ஆலப்புழா விரைவு ரயிலில், ரயில்வே காவல் ஆய்வாளர் ரத்தினகுமார் தலைமையிலான போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, ரயிலில் சென்ற மாணவர் விக்னேஷை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து, மாணவரின் பெற்றோரை நேரில் வரவழைத்த ரயில்வே போலீசார், மாணவர் விக்னேஷுக்கு அறிவுரை கூறி அவர்களுடன் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.