கொரோனா அச்சம்… கிராமத்திற்குள் வெளிநபர்கள் நுழைய தடை விதித்த மக்கள்!

 

கொரோனா அச்சம்… கிராமத்திற்குள் வெளிநபர்கள் நுழைய தடை விதித்த மக்கள்!

கோவை

சூலூர் அருகே கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வெளியாட்கள் ஊருக்குள் நுழைய ஒரு கிராமம் தடை விதித்து உள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தினசரி பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழப்பும் இரட்டை இலக்கத்தில் பதிவாகி வருகிறது. நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வரும் நிலையில், தொற்றின் தீவிரத்தை உணர்ந்து பொதுமக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா அச்சம்… கிராமத்திற்குள் வெளிநபர்கள் நுழைய தடை விதித்த மக்கள்!

இதேபோல், சூலூர் வட்டம் இருகூர் பேரூராட்சியில் உள்ள ராவத்தூர் கிராம மக்கள் தங்களுடைய பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இங்குள்ள, கலைஞர் நகர் குடியிருப்பில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், தொற்று ஏற்படாத வகையில் கிராமத்தினர் வெளியூர்களுக்கு சென்று வர கடும் கட்டுப்பாடுகள் விதித்து உள்ளனர்.

மேலும், வெளியூர் ஆட்கள் மூலம் தொற்று பரவாமல் இருக்க, கிராமத்திற்குள் வெளிநபர்கள் வரவும் தடை விதித்துள்ளனர். இதுகுறித்த அறிவிப்பை கிராமத்தின் நுழைவு வாயிலில் வைத்துள்ள பொதுமக்கள், 24 மணிநேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதையும் மீறி கிராமத்திற்குள் நுழைபவர்களை எல்லையிலேயே விசாரித்து திருப்பி அனுப்பி வருகின்றனர்.