சாத்தான் குளத்தில் போலீஸ் தாக்குதலால் உயிரிழந்த தந்தை, மகன் உடல்கள் நல்லடக்கம்!!

 

சாத்தான் குளத்தில் போலீஸ் தாக்குதலால் உயிரிழந்த தந்தை, மகன் உடல்கள் நல்லடக்கம்!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் வசித்து வந்தவர் ஜெயராஜ். அவரது மகன் பென்னிஸ். இவர்கள் இருவரும் பழைய பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகே செல்போன் மற்றும் மரக்கடை வைத்திருந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி ஊரடங்கால் கடையை அடைக்குமாறு போலீசார் கூறியுள்ளனர். அதனால் போலீசாருக்கும் இவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதால், இரண்டு பேரும் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பூதாகரமாக உருவெடுத்தது. இச்சம்பவம் தொடர்பாக தானாக முன்வந்து விசாரணை செய்த மதுரை உயர்நீதிமன்றக்கிளை, தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பாகத் தூத்துக்குடி எஸ்.பி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. ஜெயராஜ் மற்றும் பென்னிஸ் உயிரிழந்தது மக்களிடையே பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ள நிலையில், அவர்களுடைய இறப்புக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களது உறவினர்கள் உட்படப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சாத்தான் குளத்தில் போலீஸ் தாக்குதலால் உயிரிழந்த தந்தை, மகன் உடல்கள் நல்லடக்கம்!!
இருவரின் உடல்களும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின் உறவினர்களிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து இருவரின் உடலும் சாத்தான்குளம் அரசரடி தெருவில் உள்ள அவர்களது இல்லத்தில் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகநாதன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மலர் வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து கிறிஸ்தவ பாடகர் குழு மூலம் பிராத்தனை செய்யப்பட்டு அவர்களது உடல் அடக்கம் செய்யப்பட்டது.