சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் போராட்டம்!

 

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் போராட்டம்!

ஈரோடு

ஈரோடு மாவட்டம் சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள்ளுக்கு உரிய விலை வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் வெள்ளிக் கிழமைகளில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் அறுவடை செய்த எள் ஏலம் விடப்படுவது வழக்கம். இந்த நிலையில், இன்று காலை 10 மணி அளவில் எள்ளை ஏலம் விடுவதற்காக ஏராளமான விவசாயிகள் வந்திருந்தனர். அப்போது, கிலோ ரூ.22 முதல் ரூ.23 வரை விற்பனையாகும் பாலை எள்ளுக்கு, வியாபாரிகள் கூட்டு சேர்ந்து ரூ.9 முதல் ரூ.10 வரை விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய முயன்றனர்.

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் போராட்டம்!

எள்ளுக்கு உரிய விலை கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், வியாபாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், தங்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சரஸ்வதி, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

தொடர்ந்து, எள்ளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கும் படி அதிகாரிகளிடம் எம்எல்ஏ சரஸ்வதி அறிவுறுத்தினார். தொடர்ந்து, வியாபாரிகள் எள்ளுக்கு உரிய விலைக்கு கொடுக்க முன் வந்தனர். இதனை அடுத்து, விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். விவசாயிகள் போராட்டம் காரணமாக சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.