வேளாண் சட்டங்களை கண்டித்து, காவிரி உரிமை மீட்பு குழுவினர் போராட்டம்

 

வேளாண் சட்டங்களை கண்டித்து, காவிரி உரிமை மீட்பு குழுவினர் போராட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டங்களில் காவிரி உரிமை மீட்புகுழுவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாண் சட்டங்களை கண்டித்து, காவிரி உரிமை மீட்பு குழுவினர் போராட்டம்

தஞ்சாவூரில் உள்ள மத்திய அரசின் உற்பத்தி வரி அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில், காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, காவல்துறையினரின் தடுப்புகளை மீறி அலுவலகத்திற்குள் நுழைய முயன்றதால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், அவர்கள் அலுவலகம் எதிரில் உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைதுசெய்து அழைத்துச் சென்றனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மணியரசன், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால், போராட்டங்களையும் திரும்பப் பெற வாய்ப்பில்லை என்றும், விரைவில் அனைத்து விவசாய சங்கங்களும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரித்தார்.

வேளாண் சட்டங்களை கண்டித்து, காவிரி உரிமை மீட்பு குழுவினர் போராட்டம்

திருச்சியில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, காவிரி உரிமை மீட்புகுழு சார்பில் பாரதியார் சாலை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 70-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அப்போது, கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவே இந்த சட்டங்கள் இயற்றப்பட்டு உள்ளதாகவும், இதனால் உழவர்களின் நிலங்கள் பறிக்கப்படுவதுடன், கொள்முதல் நிலையங்கள் செயல்படாது என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். தொடர்ந்து, பாராதியார் சாலையில் இருந்து பேரணியாக புறப்பட்டு சென்ற அவர்கள், ஜங்சன் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்து போலீசார் அழைத்துச் சென்றனர்.