குடியரசுத் தினத்தன்று ஒரு லட்சம் டிராக்டர்களில் பேரணி : விவசாயிகள் அறிவிப்பு!

 

குடியரசுத் தினத்தன்று ஒரு லட்சம் டிராக்டர்களில் பேரணி : விவசாயிகள் அறிவிப்பு!

டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஆண்டு நவ.26ம் தேதியில் இருந்து, டெல்லியின் புராரி மைதானத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது. கடும் குளிரால் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தும் விவசாயிகள் இடைவிடாது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, போராட்டத்தை தடுக்க விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு நடத்திய 9 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தது.

குடியரசுத் தினத்தன்று ஒரு லட்சம் டிராக்டர்களில் பேரணி : விவசாயிகள் அறிவிப்பு!

இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசின் அலட்சியப்போக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். மேலும், விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காண 4 பேர் கொண்ட குழுவை நியமித்து உத்தரவிட்டனர். இக்குழுவின் பரிந்துரையின் பேரில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தனர். உச்சநீதிமன்றத்தின் இந்த நடவடிக்கைக்கு பிறகும், போராட்டத்தில் இருந்து பின்வாங்க விவசாயிகள் ஒப்புக் கொள்ளவில்லை. அச்சட்டங்களை திரும்பப்பெறும் வரையில், போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

குடியரசுத் தினத்தன்று ஒரு லட்சம் டிராக்டர்களில் பேரணி : விவசாயிகள் அறிவிப்பு!

இந்த நிலையில், ஜன.26ம் தேதி குடியரசு தினத்தன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் ஒரு லட்சம் டிராக்டர்களில் பேரணி செல்ல இருப்பதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். அந்த பேரணியில் பங்கேற்பதற்காக பஞ்சாபில் இருந்து ஏராளமான டிராக்டர்களில் விவசாயிகள் டெல்லி நோக்கி படையெடுத்துள்ளனர். டிராக்டர் பேரணி மூலம் டெல்லியை முற்றுகையிடவிருப்பதாக விவசாயிகள் ஏற்கனவே அறிவித்திருந்தனர். அந்த முடிவு அண்மையில் பின்வாங்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் டிராக்டர் பேரணி நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.