வங்கி அதிகாரிகளின் தொல்லையால் விவசாயி தற்கொலை!

 

வங்கி அதிகாரிகளின் தொல்லையால் விவசாயி தற்கொலை!

கரூர் மாவட்டம் குளித்தலை குட்டப்பட்டியில் டிராக்டருக்காக வாங்கிய கடன் தவணையை கட்ட தவறியதால் தனியார் வங்கி ஊழியர்கள் மிரட்டி, அவமானப்படுத்தி திட்டியதால் மனமுடைந்த வடிவேல் (38) என்ற விவசாயி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

வங்கி அதிகாரிகளின் தொல்லையால் விவசாயி தற்கொலை!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேல குட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (33). லாரி டிரைவரான இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயமும் பார்த்து வந்தார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு டிராக்டர் வாங்குவதற்காக திருச்சி உள்ள தனியார் வங்கியில் ரூ 7.50 லட்சம் கடன் வாங்கியுள்ளார். மாதம் தோறும் ரூ.30 ஆயிரம் ரூபாய் தவணை செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் கடன் பெற்ற இவர் இரண்டு தவணை அதாவது ரூ 60 ஆயிரம் மட்டுமே செலுத்தியுள்ளார். கடன் பெற்று இரண்டு மாதத்திலேயே கொரோனா ஊரடங்கு நடைமுறைக்கு வந்துவிட்டது. இதன் காரணமாக தற்போது வரை சரிவர வேலை இல்லாமல் வருமானம் இன்றி தவித்து வந்துள்ளார்.

டிராக்டருக்கு வாங்கிய கடன் தொகையை கட்ட சொல்லி வங்கி ஊழியர்கள் கட்டாயப்படுத்தி வந்துள்ளனர். செப் 9ம் தேதி கடன் தொகையை கட்ட சொல்லி தனியார் வங்கி ஊழியர்கள் அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது அவர் வெளியே சென்று இருந்ததால் வயலில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த அவரது மாமியாரிடம் வங்கி ஊழியர்கள் கடன் தொகையைக் கட்டச் சொல்லி மிரட்டி சென்றுள்ளனர். இதனால் மனமுடைந்த விவசாயி வடிவேல் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தினைப் குடித்து தற்கொலை செய்து உயிரிழந்தார்.

தகவலறிந்து தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற கழக மாநில பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள் பலர் உயிரிழந்த வடிவேலின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர். மேலும், ரூ.5000 நிதி உதவி வழங்கிய அவர்கள், தந்தையை இழந்து நிற்கும் அவரது குழந்தைகளின் கல்விச் செலவை விவசாயிகள் முன்னேற்ற கழகம் ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்துள்ளனர். விவசாயி வடிவேல் உயிரிழப்பிற்கு காரணமான தனியார் வங்கி ஊழியர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், உயிரிழந்த வடிவேல் குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற கழகத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.