சூர்யா மீது நடவடிக்கை எடுக்க தேவையில்லை என 6 முன்னாள் நீதிபதிகள் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
நீட் தேர்வால் நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதனால் மனம் பொறுக்காத நடிகர் சூர்யா, நீட் தேர்வுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், கொரோனா அச்சத்தால் காணொளி வாயிலாக வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் மாணவர்களை தேர்வெழுத சொல்கிறது என தெரிவித்திருந்தார். நீதிமன்றத்தை விமர்சித்த சூர்யாவின் இந்த கருத்து சர்ச்சையை கிளப்பியது. இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி சுப்பிரமணியம், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சாஹிக்கு கடிதம் எழுதினார்.

ஆனால் சூர்யாவுக்கு ஆதரவு அளித்த முன்னாள் நீதிபதிகள், நீட் தேர்வுக்கான கோபத்தின் வெளிப்பாடு தான் இந்த அறிக்கை என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் கூறியிருந்தனர். இந்த நிலையில், நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க தேவையில்லை என 6 முன்னாள் நீதிபதிகள் தலைமை நீதிபதி ஏ.பி சாஹிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
முன்னாள் நீதிபதிகள் சந்துரு, பாஷா, சுதந்திரம், கண்ணன், ஹரிபரந்தாமன், அக்பர் அலி எழுதிய அந்த கடிதத்தில், உயர்நீதிமன்றம் மீது மதிப்பும் மாண்பும் இருப்பதால் நடவடிக்கை எடுப்பதை தவிர்த்தால் தேவையில்லாத சர்ச்சைகள் இராது என்றும் சூர்யாவின் அறக்கட்டளையில் பல மாணவர்கள் படித்து பயன்பெற்றுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.