ஏர் கூலருக்காக வென்டிலேட்டர் இணைப்பை அவிழ்த்த குடும்பத்தினர் – ராஜஸ்தானில் நோயாளி பரிதாப பலி

 

ஏர் கூலருக்காக வென்டிலேட்டர் இணைப்பை அவிழ்த்த குடும்பத்தினர் – ராஜஸ்தானில் நோயாளி பரிதாப பலி

கோட்டா: ஏர் கூலருக்காக வென்டிலேட்டர் இணைப்பை குடும்பத்தினர் அவிழ்த்ததால் நோயாளி உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஒரு நோயாளி ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இறந்தார். ஆனால் அவர் கொரோனா வைரஸ் காரணமாகவோ அல்லது வென்டிலேட்டர் இல்லாததாலோ உயிரிழக்கவில்லை. மாறாக, அவரது சொந்த குடும்பத்தினரின் அலட்சியம் காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்தினரின் பொறுப்பற்ற உறுப்பினர்கள் நோயாளியின் உயிரைக் கண்காணித்து வந்த வென்டிலேட்டரின் பிளக்கை துண்டித்து விட்டதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் ஜூன் 15 ம் தேதி மஹாராவ் பீம்சிங் மருத்துவமனையில் நடந்தது. கடந்த 13-ஆம் தேதி கொரோனா அறிகுறிகள் காரணமாக அந்த நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு கொரோனா இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து தனிமைப்படுத்தும் வார்டுக்கு அவர் மாற்றப்பட்டார்.

இந்நிலையில், நோயாளியைச் சந்திக்க அவரது குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். அப்போது அந்த அறை மிகவும் வெக்கையாக இருந்ததால் வெளியில் இருந்து எர்கூலரை கொண்டு வந்திருந்தனர். அதை ஆன் செய்வதற்கு நோயாளியை கண்காணித்து வந்த வென்டிலேட்டர் கருவியின் பிளக்கை பயன்படுத்தினர்.

இதையடுத்து வென்டிலேட்டர் பேட்டரியில் சிறிது நேரம் வேலை செய்தது. ஆனால் அதன் பின்னர் கொஞ்ச நேரத்தில் வென்டிலேட்டர் செயலிழந்ததால் நோயாளியின் உடல்நிலை மோசமடைந்தது. இதை அறிந்து விரைந்து வந்த மருத்துவர்கள் அவரது உயிரைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது உயிரை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

நோயாளி உயிரிழந்ததை தொடர்ந்து அங்கிருந்து குடும்பத்தினர் மருத்துவர்களையும், ஊழியர்களையும் தாக்க தொடங்கினர். இந்நிலையில், அந்தநேரத்தில் பணியில் இருந்த மருத்துவர் வருண் நோயாளியின் குடும்பத்தினருக்கு எதிராக அதிகாரிகளிடம் எழுத்துப்பூர்வ புகாரை சமர்ப்பித்தார். இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.